உள்ளூர் செய்திகள்

சட்டையை கழட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

கடந்த, 1986ல் அறந்தாங்கி, டி.இ.எல்,சி., பள்ளியில், 7ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்தேன். பள்ளியின் அருகில் காவல் நிலையம்; பள்ளியை சுற்றி பெரிய மதில் சுவர் உண்டு.பள்ளியில் காலை, 11:00 மணிக்கு முன் மாணவர்களுக்கு, விடைத்தாள் கொடுத்து, குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு கையில், இரண்டு அடி கொடுத்து அறிவுரை கூறினேன். இடைவேளை முடிந்து, அரை மணி நேரமாகியும், ஒரு மாணவன் வரவில்லை.சற்று நேரத்தில், இரு காவலர்களுடன் அந்த மாணவன், தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றான். என்னை காவல் நிலையத்தில் அழைப்பதாக கூறி, இரண்டு ஆசிரியர்களுடன் அனுப்பி வைத்தனர்.இன்ஸ்பெக்டர் அறையில், என்னிடம் அடி வாங்கிய மாணவனின் தந்தை, சில ஆட்களுடன் இருந்தார். பையனின் தந்தை, ஆளும் கட்சியை சேர்ந்தவர். அவரது மகனை நான், கொலை செய்யும் நோக்கத்துடன், அடித்ததாக புகார் செய்திருந்தார். இன்ஸ்பெக்டர் அவசரமாக, தன், யூனிபார்ம்மை கழட்டினார். என்ன தான் நடக்க போகிறதோ என்று ஐயப்பட்டோம்.பனியனையும் கழட்டி, அவரது முதுகில் இருந்த தழும்புகளை காட்டினார். 'இந்த தழும்புகளால் தான் இன்று நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன்; வாத்தியார் அடித்தார் என்று பெருசா புகார் கொடுக்க வந்து விட்டீரே...' என்று கூறி, மனுவை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டார். எங்களிடமும், 'படிக்காதவன் மாடு மேய்க்க போகட்டும், யாரையும் இனிமேல் அடிக்காதீர்கள்!' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.ஆண்டுகள் பல ஆனாலும், இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை.- ஜி.மைக்கேல், சாத்தூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !