அனைவரையும் வாழ வைக்கும் அரசியலமைப்பு!
ஜனவரி 26 - குடியரசு தினம்!தலைவர்களின் தியாகத்தால் ஆகஸ்ட் 15, 1947ல் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. மக்களின் விருப்பம் நிறைவேறியது. அதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின், ஜனவரி 26ல் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது. இதற்கு அரசியல் அமைப்பு சட்டம் மிக முக்கியமானது. நாட்டின் உயிர் போன்றது. அரசு எடுக்கும் எந்த முடிவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருந்தால் நடைமுறைப்படுத்த முடியாது. குடியரசு ஆட்சியின் முக்கியத்துவமே அரசியல் அமைப்பு சட்டத்தில் தான் உள்ளது.அரசியலமைப்பு சட்டம் பற்றி பார்ப்போம்...அரசியல் அமைப்பு சட்டம், நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. ஜனவரி 26, 1950ல் நடைமுறைக்கு வந்தது. * உலகிலே மிக நீளமான சட்டங்களை உடையது* அடிப்படை உரிமைகள், அமெரிக்க அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது* நாடாளுமன்ற நடைமுறை ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது* அரசை நெறிப்படுத்தும் ஆணைகள் ஐரோப்பிய நாடான அயர்லாந்து அடிப்படையிலானது* சட்டமியற்றும் நடைமுறை வட அமெரிக்க நாடான கனடாவில் இருப்பது போன்றது அமைந்துள்ளது.இந்த சட்டத்தை உருவாக்க, மூன்று ஆண்டுகள் ஆயின. அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.சட்டத் தொகுப்பு முழுக்க கைகளால் எழுதப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் மிக அழகிய கையெழுத்தால் அமைந்துள்ளது. உயர்ந்த கலை நிறுவனமான சாந்தி நிகேதனைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள், அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும், கலைநயம் மிக்கதாக உருவாக்கினர். அந்த புத்தகம், நாடாளுமன்ற நுாலகத்தில், ஹீலியம் வாயு நிரப்பிய பெட்டகத்தில் பராமரிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசு, குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள், அரசின் நடைமுறைகள், அதிகாரங்களை வரையறுக்கிறது. ஒவ்வொரு குடியரசு தின கொண்டாட்டத்தின் போதும் மிகச் சிறப்பான முறையில் ஊர்வலம், டில்லியில் நடைபெறும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அதைக் கண்டு களிப்பர். துணிவு மிக்க வீரர்களின் தீரச் செயலை பாராட்டி பரம்வீர் சக்ரா, வீர் சக்ரா போன்ற விருதுகளை குடியரசு தலைவர் வழங்குவார். போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ல் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை, 'சம்விதான் திவஸ்' என்று அழைப்பர். இந்திய நாடாளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை, நவம்பர் 26, 1949ல் ஏற்றது. அது ஜனவரி 26, 1950ல் அமலுக்கு வந்தது. அந்த நாளே, குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இனிய குடியரசு தின வாழ்த்துகள்!அடிப்படைகள் என்ன?இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு பற்றிய விபரங்கள் உள்ளன. இரண்டாவதாக குடி உரிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவதாக அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதன்படி...* சட்டத்தின் முன் அனைவரும் சமம்* அனைவருக்கும் சம பாதுகாப்பு* பொதுவேலைகளில் சம வாய்ப்பு* தீண்டாமை ஒழிப்பு* அனைவருக்கும் கல்வி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து அனைவருக்கும் உரிமைகள் கிடைக்க உறுதி ஏற்போம். - ஜி.எஸ்.எஸ்.