இளஸ் மனஸ்! (274)
அன்புள்ள அம்மா...என் வயது, 15; அரசு பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். பாம்பாட்டிகள், மகுடி வாசிப்பதை சினிமா படங்களில் பார்த்துள்ளேன். அதை பார்த்த போது, வினோதமான ஆசை ஏற்பட்டது.சொந்தமாய் மகுடி வாங்கி இசைக்க வேண்டும் என்ற ஆசை பாடாய் படுத்துகிறது; இந்த இசைக்கருவி எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. இதை இசைப்பதற்கு யார் கற்று தருவர் என்றும் தெரியவில்லை. மகுடி ஊதினால் விஷமுள்ள நல்ல பாம்பு மயங்கும் என்பது உண்மையா... இது பற்றி, கூடுதல் தகவல்களை கூறி, எனக்கு உதவுங்கள். என் ஆசை நிறைவேற வழிகாட்டுங்கள்.இப்படிக்கு,எம்.ஹசன் ஜிலானி.அன்புள்ள மகனே...மகுடி என்பது பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஒரு மரபு வழி இசைக்கருவி. துளைக்கருவி அதாவது, காற்று இசைக்கருவி வகையை சேர்ந்தது. இந்தியாவில் தோன்றியது. மரபு வழியாக கற்று பயன்படுத்தும் பண்பாட்டு இசைக்கருவி. இதை சமய சடங்குகளிலும் பயன்படுத்துவர்.மகுடிக்கு, ஊதிலி, சீணிப்புரடை, நாகசுரை, புங்கி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில், 'தி க்ரவுன்' என்பர்.குழந்தையை துாங்க வைக்கவும், ஆடு, மாடு மேய்க்கவும் மகுடி இசை பயன்படும்.மகுடியை, சுரைக்குடுகையால் செய்வர். சுரை குடுக்கையின் கழுத்துப்பகுதி நீக்கப்பட்டு, மூங்கில் குழாய்கள் பொருத்தப்படும்; அதில் ஏழு துளைகள் இடப்படும். தேன் மெழுகு வைத்து இடைவெளிகளை அடைப்பர். இப்படி தான் மகுடி தயாரிக்கப்படுகிறது.இரண்டு அல்லது மூன்று குழாய் உடைய மகுடிகள் கூட உண்டு.நடுப்பகுதி, உப்பலாக, வாய் பகுதியும், அடி பகுதியும் புல்லாங்குழல் போல நீண்டும் இருக்கும். மகுடி பற்றி, சைவ சமய நுால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகுடியில் வாசிக்கப்படும் ராகம் புன்னாகவராளி. இது, நாட்டுப்புற இசையை சார்ந்தது. இசைக்கருவிகள் விற்கும் இடத்தில், மகுடி கிடைக்க வாய்ப்பில்லை. சென்னை விமான நிலையத்தின் எதிரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிய சந்தை ஒன்று கூடுகிறது. அங்கு, சில கடைகளில் அரிதான பொருட்களை விற்பனை செய்கின்றனர்; சென்னையில் உறவினர் இருந்தால், அங்கு சென்று வாங்கச் சொல். மகுடி விற்பனைக்கு கிடைக்கும். சேலம் மாவட்டம், கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சிற்றுார் நிதிபுரத்தில் ஒரு மகுடி கலைஞர் இருக்கிறார். அவரிடம், மகுடி வாசிக்க கற்றுக் கொள்ளலாம்.பழங்குடி மக்கள் வாசிக்கும் மகுடி இசையை பாம்பு கேட்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் லியோ வான் ஹெம்மனும், பால் ப்ரெய்டலும் ஆராய்ச்சி முடிவு ஒன்றை கூறியிருக்கின்றனர். பாம்பின் உள்காதுடன், பாம்பின் தாடைக்கு எலும்பு தொடர்பு உண்டு. பாம்பின் தாடை நுண்ணியமாக அதிரும் போது, 'ஸ்டேப்ஸ்' என்ற சிறு எலும்பும் அதிரும்.பாம்பு தலையை, தரையில் இருந்து துாக்கி விட்டால் நில அதிர்வை உணராது. பாம்பாட்டி மகுடி வாசிக்கும் போது, பாம்பு, அவரது உடல் அசைவுகளையும், மகுடி அசைவுகளையும் கண்டு, எதிர்வினை ஆற்றக்கூடும். மகுடிக்கு, பாம்பு மயங்கும் என்பதெல்லாம் நிரூபிக்கப்படாத மரபு வழிக் கூற்றுகள். மகுடி கற்றுக் கொள்ளும் ஆசையை விட்டு, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்த கற்றுக் கொள். அது உன் வாழ்வை பிரகாசமாக்கும்.-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.