இளஸ் மனஸ்! (321)
அன்புள்ள ஆன்ட்டி... எனக்கு வயது 15; பிரபல தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். சக மாணவர்கள் என்னிடம் பேசும்போது... 'அத பாத்து எனக்கு மயிர் கூச்செறிந்தது...' 'கேட்டதும் புல்லரிச்சுப் போச்சு...' இது போன்ற சொற்றொடர்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அதைக் கேட்டதும் வியப்பு ஏற்படுகிறது. உண்மையில் 'மயிர் கூச்செறிதல்' என்ற சொல்லுக்கு பொருள் என்ன... அது மனிதருக்கு நன்மை செய்யுமா... கெட்டதை செய்யுமா... என் சந்தேகத்தை தீர்க்க உதவுங்கள். --இப்படிக்கு, எம்.எஸ்.தியாகபாரி. அன்பு மகனுக்கு... தேசபக்தியில் தீவிர ஈடுபாடுடையோருக்கு தேசீயகீதம் பாடப்படும் போது, மயிர் கூச்செறியும். பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டைன் கதைகளை படிக்கும் போது அவரது தீவிர வாசகர்ளுக்கு மயிர் கூச்செறியும். கடும் குளிர் மாதமான டிசம்பரில் உடல் வெப்பத்தை பேண மயிர்கூச்செறியும். மனித உடலில் பல லட்சம் ரோமங்கள் உள்ளன. ஒவ்வொரு ரோம நுண்குழியிலும் முடி விரைப்பு தசைகள் காணப்படுகின்றன. அந்த குட்டி தசை சுருங்குவதைத் தான், 'மயிர் கூச்செறிதல்' என்கின்றனர். ஒருவருக்கு, மயிர் கூச்செறிய பல்வகை துாண்டுதல் இருக்க வேண்டும். அவை... கடும் குளிர்ச்சியான கால நிலை உணர்வை துாண்டும் அனுபவம் மன பதட்ட சூழல் மற்றும் திகில் பாலுணர்வு துாண்டுதல் கிச்சுகிச்சு மூட்டல் உள்ளத்தை உருக்கும் இசை. இது போல் வினோதமான நிகழ்வுகள். - இசை கேட்கும் போது மயிர் கூச்செறிவதை, 'பிரிஸன்' என்பர். இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு மயிர் கூச்செறியாது. ஆயுள் முழுக்க சிலருக்கு மயிர் கூச்செறிதல் தொடரும். அதை, 'கெரோடோசிஸ் பைலாரிஸ்' என்பர். மயிர் கூச்செறிதல் ஒரு அனிச்சை செயல். மூதாதையரிடம் இருந்து கிடைத்துள்ள மிச்சம் மீதி. மனித பரிணாம வளர்சசியின் நினைவாக தொடர்கிறது. மயிர் கூச்செறிதலின் முன்னோட்டம், 'சண்டையிடு அல்லது தலைதெறிக்க ஓடிவிடு' என்பதற்கான சமிக்ஞையாக உள்ளது. மயிர் கூச்செறியும் போது, உடலில் அட்ரினலின், எபிநெப்ரின், டெஸ்டோஸ்டிரோன், டோபமைன் என்ற ஹார்மோன்கள் சுரக்கும். பறவை, முள்ளம்பன்றி, நீர் நாய், பனிக்குரங்கு, நாய், கொண்டைக்கிளி போன்ற விலங்குகளுக்கும் மயிர் கூச்செறியும். பூனைக்கு ஏற்படும் மயிர் கூச்செறிதல் வேறு விதமாக இருக்கும். மயிர் கூச்செறிதல் மிருகங்களுக்கு உயிர்வாழும் உத்தியாக பயன்படுகிறது. உடலை பெரிதாக காட்டி எதிரியை பயமுறுத்தி தந்திரமாக வாழ்கின்றன, சில விலங்குகள். அதே நேரம் மிதமிஞ்சிய குளிரிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. மயிர் கூச்செறிதல் என்ற உணர்வை ஹாரிபைலேஷன், சில்பம்ப்ஸ், கூஸ் ப்ளஷ், ஸ்கின் எரக்ஸன், கூஸ் பிம்பிள்ஸ் எனவும் ஆங்கிலத்தில் அழைப்பர். மயிர் கூச்செறிகிறது என என் பாட்டியிடம் கூறினால், 'சாம்பலை பூசிகொண்டு கிணற்றில் குதி...' என கிண்டல் செய்வார். இது ஒரு வகை உணர்வு என்பதை புரிந்து செயல்படவும். - -அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.