உள்ளூர் செய்திகள்

கதையில் கருத்து!

திருநெல்வேலி, ம.தி.தா., இந்துக் கல்லுாரி உயர்நிலைப் பள்ளியில், 1948ல், 9ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த சுப்பிரமணிய அய்யர், அன்றாடம் ஒரு நற்செயலை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் வகையில், கதைகள் கூறி விளக்குவார். அது, சிந்தனையை துாண்டுவதாக அமைந்திருந்தது. அன்றைய வகுப்பில், 'கிராமத்தில் ஒருவன், மாலை 6:30 மணிக்கு, சந்தைக்கு புறப்பட்டான். ஒற்றையடி பாதையில் நடந்து கொண்டிருந்தான். வெளிச்சம் மிகக் குறைவாக இருந்தது. வழியில், குறுக்கே ஒரு பாம்பு சென்றதை பார்த்தான். அவன் எண்ணத்தில் பாம்பு குடியேறி விட்டது... 'சந்தையில் வேலையை முடித்து திரும்பிக் கொண்டிருந்தான். பாம்பை கண்ட பகுதிக்கு வந்ததும், மனதில் பயம் ஏற்பட்டது. அந்த பாம்பு, அவன் கால் பெருவிரலை கவ்வியது போல் எண்ணம் வந்தது... 'மயக்கத்தில் சாய்ந்து விட்டான். சற்று நேரத்துக்கு பின் எழுந்து, கால் விரலைத் தடவி பார்த்தான். வெயிலில் உலர்ந்த மாங்கொட்டைத் தோல், அவன் விரலைப் பற்றியிருந்தது. இதைக் கண்டதும் பயம் நீங்கி நடந்தான்...' என்ற கதையைக் கூறி, தைரியமுடன் வாழ்வதற்கு தக்க அறிவுரை தந்தார், வகுப்பாசிரியர். என் வயது, 92. நகராட்சித் துறையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது, தைரியமாக கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளேன். பள்ளியிலே இதற்கு அடிப்படை அமைத்து தந்த, வகுப்பாசிரியர் சுப்பிரமணிய அய்யர் நினைவை போற்றுகிறேன். - ப.குமாரவேல், திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !