கவலை போக்கும் கலை!
சென்னை, தி.நகர், ராமகிருஷ்ணா மிஷின் சாரதா வித்யாலயா பள்ளியில், 1970ல், 7ம் வகுப்பு படித்த போது, கைத்திறன் பயிற்சி ஆசிரியையாக இருந்தார் சரஸ்வதி. எளிய முறையில் கைகுட்டை தைக்க கற்பித்தார். சிறப்பாக தைக்கும் மாணவியருக்கு, கல்வியாண்டு இறுதியில் போட்டி நடத்தி பரிசளிக்கப் போவதாக அறிவித்தார்.போட்டியில் உற்சாகமாக பங்கேற்றேன். வேகமாக தைத்து முதலாவதாக சமர்ப்பித்து விடும் ஆர்வத்துடன் செயல்பட்டேன். நான் தைத்த கைக்குட்டை, உடுத்தியிருந்த உடையோடு ஒட்டியிருந்தது. நிதானம் தவறி பாவாடையுடன் சேர்த்து தைத்திருந்ததை கண்டேன். தனியாக பிரித்து எடுக்க முடியாததால் அழுதபடியே ஆசிரியையிடம் காண்பித்தேன்.சிரித்தபடி, 'நிதானமாக செயல்பட வேண்டாமா...' என்று ஆறுதல் படுத்தி முதல் பரிசாக, 'எம்ராய்டரி செட்' ஒன்றை தந்தார். அதை உபயோகித்து பின்னாளில் பெரும் பயன் பெற்றேன். போட்டிகளில் பரிசுகள் குவித்தேன். அத்தனையும் மானசீகமாக அந்த குருவுக்கே சமர்ப்பித்து மகிழ்ந்தேன். தற்போது, என் வயது, 65; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். இன்றும் பூ தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு அடிப்படையாக அந்த ஆசிரியையிடம் கற்ற கலையால் கவலை மறந்து வாழ்கிறேன்.- உஷா பாலசுப்ரமணியன், சென்னை.