குதிரைலாட நண்டு!
ஆழங்குறைந்த கடல் நீரில் வாழும் உயிரினம் குதிரைலாட நண்டு. ஆங்கிலத்தில் 'ஹார்ஸ்ஷூ கிராப்' எனப்படுகிறது. வட அமெரிக்கா, ஆசியாவின் கிழக்கு கடற்கரையில் அதிகம் காணப்படுகிறது. இரண்டு பெரிய கூட்டுக் கண்களும், சிறிய எளிய பல கண்களும் இதன் புற ஓட்டில் அமைந்திருக்கும். புற ஓட்டின் கீழ்ப்பகுதி பெரிய சிலந்தியின் உடல் போல தோற்றமளிக்கிறது. குதிரைலாட நண்டுக்கு, ஐந்து ஜோடி கால்கள் உள்ளன. அவை நடப்பதற்கும், நீந்துவதற்கும், உணவை வாய்க்குள் தள்ளுவதற்கும் பயன்படுகின்றன.குதிரைலாட நண்டால் நீரில் நீந்த முடியும். இதன் புதை படிமங்கள் உலகில் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை, 45 கோடி ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. புதை படிம வடிவத்துக்கும் தற்போதைய உருவத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. புவியில், 30 கோடி ஆண்டுகளாக பெரிய மாற்றமின்றி இவை வாழ்வதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.இதன் முதன்மை உணவாக புழு, மெல்லுடலி உயிரினங்கள், சிறிய மீன்கள் உள்ளன. பெண் நண்டு, ஒரே தடவையில் சில ஆயிரம் முட்டைகள் வரை இடும். இதன் நீல நிறமுள்ள ரத்தம் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. - யாழிசை