உள்ளூர் செய்திகள்

மிடில்மிஸ்ட்!

உலகில் மிகவும் அரிதான தாவர வகைகளில் ஒன்று மிடில்மிஸ்ட். இதில் இரண்டு மாதிரிகள் மட்டுமே உலகில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மலரின் தனித்துவ சிவப்பு வண்ணம், காண்போரை கவரும் வகையில் இருக்கும். எழிலான தோற்றம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், தாவரவியல் அறிஞர்கள் மற்றும் மலர் விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாவரம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வோம்... தாவர குடும்பத்தில் கமெலியா பேரினத்தை சேர்ந்தது மிடில்மிஸ்ட். இதன் மலர், ரோஜா போல் கவரும் வகையில் இருக்கும். அண்டை நாடான சீனாவை தாயகமாக உடையது. இங்கிருந்து, 1804-ல் ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன், சிஸ்விக் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதை எடுத்து வந்தவர் ஜான் மிடில்மிஸ்ட். இங்கிலாந்து, ெஷப்பர்ட்ஸ் புஷ் பகுதியை சேர்ந்தவர். அவரது பெயராலே இந்த தாவரம் வழங்கப்படுகிறது. சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்ட இந்த தாவரம், லண்டன் ஷெப்பர்ட்ஸ் புஷ் பகுதி, கியூ கார்டனில் பராமரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் நடந்த போர்களின் போது குண்டு வீச்சுகளில் இந்த தோட்டம் அழியும் நிலை ஏற்பட்டது. தன்னார்வலர்களின் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டது. தற்போது, இங்கிலாந்து சிஸ்விக் ஹவுஸ் தோட்டத்தில் இந்த தாவரம் உள்ளது. ஆஸ்திரேலிய கண்ட நாடான நியூசிலாந்து ட்ரீட்டி ஹவுஸ் தோட்டத்திலும் வளர்கிறது. மிடில்மிஸ்ட் மலர், ரோஜா போன்று அடர் சிவப்பு வண்ணத்தில் இதழ்களை கொண்டுள்ளது. தனித்துவமுள்ள இந்த மலர், 'ஆன்டிஆக்ஸிடன்ட்' பண்புகளை அதிகம் கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதயம் மற்றும் புற்றுநோய் மருந்து தயாரிப்பில் உதவுவதாக கூறப்படுகிறது. மிடில்மிஸ்ட் மலரில் அதிக அளவில் 'ஒலிக்' அமிலம் உள்ளது. இது, தோலை ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவுகிறது. முதுமையைத் தள்ளிப்போடும் திறன் உடையது. மிடில்மிஸ்ட் தாவரம் மிதமான சூரிய ஒளி உள்ள பகுதிகளில் வளரும். உயர்ந்து வளர்ந்த மரங்களின் அடியில் நிழல் பகுதியிலும் நன்கு வளரும் என கண்டறியப்படுள்ளது. செடியின் முற்றிய தண்டு பகுதியை வெட்டி, எடுத்து நடுவதன் வழியாக புதிய செடியை உருவாக்கலாம். மிடில்மிஸ்ட் மிகவும் அரிதாக உள்ளதால், தோட்டங்களில் மட்டும் பாதுகாக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் தாயகமான சீனாவில் இந்த இனம் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !