முதல்படி!
சிவகங்கை, அரசர் உயர்நிலைப்பள்ளியில், 1968ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சியுடன் ஹிந்தி மொழியில் 'விஷார்த்' பட்டமும் பெற்றிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் காரைக்குடி, புதுவயல் ராமநாதன் செட்டியார் உயர்நிலை பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணி உத்தரவு வந்தது. உடனே வேட்டி, சட்டை அணிந்து சிறிய பையுடன் அந்த பள்ளி தலைமையாசிரியர் கண்ணனை சந்தித்தேன். நியமன உத்தரவை பெற்றதும் நிதானமாக, 'மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து பதவி ஒப்பளிப்பு உத்தரவு வந்த பின் தான் உனக்கு சம்பளம் கிடைக்கும். யோசித்து சொல்...' என்றதும் சம்மதித்தேன். உடனே அலுவலக உதவியாளரை அழைத்து, 'நாவல் மரத்தடி உணவகத்தில் இவருக்கு தேவையானதை தினந்தோறும் வழங்க கூறு... சம்பளம் வந்தவுடன் கட்டணத்தை கொடுக்கச் சொல்கிறேன்...' என்று அனுப்பி வைத்தார் தலைமையாசிரியர். பள்ளி தாளாளர் வீட்டில் தங்கியிருக்கவும் பரிந்துரைத்தார். அது வாழ்க்கை பாதையை சுலபமாக துவங்க உதவியது. அங்கு ஓராண்டு பணி புரிந்த பின், கல்லுாரியில் சேர்ந்தேன். நன்றாக படித்து பட்டம் பெற்று, தமிழக அரசு தேர்வாணையம் வழியாக அரசு பணியில் சேர்ந்தேன்.தற்போது என் வயது 75. தமிழக நெடுஞ்சாலைதுறையில் கோட்ட மேலாளராக பதவி உயர்ந்து ஓய்வு பெற்றேன். வாழ்வின் முதல்படியில் ஏற பரிவுடன் உதவிய தலைமையாசிரியர் கண்ணனை போற்றி வாழ்கிறேன். - எஸ்.நாராயணன், மதுரை. தொடர்புக்கு: 94433 37301