இந்திய தேசிய நூலகம்!
இந்தியாவில் ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள அமைப்பு இந்திய தேசிய நுாலகம். புத்தக விநியோக சட்டத்தில் இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு நுால் பிரதியும் இங்கு அனுப்ப வேண்டும். மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா, அலிப்பூர், பெல்வெடேர்வில் 30 ஏக்கர் பரப்பில் இந்த நுாலகம் அமைந்துள்ளது. தற்போது, 22 லட்சம் நுால் மற்றும் கையெழுத்து பிரதிகள் இங்கு உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் மார்ச் 21, 1836ல் துவக்கப்பட்டது. அப்போது, கோல்கட்டா பொது நுாலகம் என அழைக்கப்பட்டது. இது உருவான வரலாற்று தகவல்களை பார்ப்போம்... ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலீஷ் மெயில் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர் ஜே.ெஹச்.ஸ்டாக்லியர். பொதுமக்கள் பயன் பெற நுாலகத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு பொது கூட்டத்தில் பேசினார். உடனே, 6,500 புத்தகங்கள் நன்கொடையாக கிடைத்தன. பலரும் நுாலகம் அமைக்க நிதியை வழங்கினர். அதற்கு உரிய நிலத்தை டாக்டர் எப்.பி.ஸ்ட்ராங் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். இதையடுத்து நுாலகம் உருவானது. அச்சு பிரதிகளை பராமரித்தது. பின், இம்பீரியல் நுாலகத்துடன் இணைக்கப்பட்டது. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த கர்ஷன் ஆட்சி காலத்தில் அரசுடமையாக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் தேசிய நுாலகமாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத், பிப்ரவரி 1, 1953ல் முறைப்படி திறந்து வைத்தார். முதல் நுாலகராக ஸ்ரீ பி.எஸ்.கேசவன் பொறுப்பேற்றார். இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் நுால்கள் மற்றும் செய்தித்தாள்கள் இங்கு உள்ளன. கையெழுத்துப் பிரதிகளும், வரைபடங்களும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் பழங்காலத்தில் எழுதப்பட்ட அரிச்சுவடிகள் பல இங்கு பாதுகாக்கப்படுகின்றன. கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கணம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நுால்கள் இங்கு உள்ளன. இந்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகம் இந்த நுாலகத்தை பராமரிக்கிறது.- கோவீ.ராஜேந்திரன்