உள்ளூர் செய்திகள்

நட்பின் இலக்கணம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, துாய சவேரியார் பள்ளியில், 1980ல், 12ம் வகுப்பு படித்த போது விடுதியில் கீழ் தளத்தில் தங்கியிருந்தேன். முந்தைய வகுப்பில் கணித பாடம் கடினமாக தெரிந்ததால் அலட்சியம் காட்டி வந்தேன். மிகவும் பின்தங்கியிருந்ததால் போராடும் நிலை ஏற்பட்டது. இதனால் மற்ற பாடங்களிலும் ஆர்வம் குறைந்தது.அரையாண்டு தேர்வில் வகுப்பில் சராசரி என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். சமாளித்து முன்னேற தெரியாமல் தவித்தேன். அதே பள்ளியில் பிளஸ் 1 படித்த சுப்பிரமணியன், என் மீது மிகவும் பிரியமாக இருப்பான். விடுதியில் மாடி பகுதி அறையில் தங்கியிருந்தான். என் நிலையை அறிந்திருந்தான்.அடுத்த திருப்புதல் தேர்வு அறிவித்ததும் அதிகாலை 4:00 மணிக்கு என் அறைக்கு வந்து எழுப்பி விடுவான். அவன் போனதும் அலட்சியமாக மீண்டும் துாங்கி விடுவேன். இப்படி மூன்று நாட்கள் கடந்தன. அவன் விடுவதாக இல்லை. தொடர்ந்து எழுப்பியதால், 'இவனுக்கு நம்மீது இருக்கும் அக்கறைக்கு மதிப்பு தர பொறுப்புடன் செயல்பட வேண்டாமா' என்ற எண்ணம் தோன்றியது.எழுந்து படிப்பில் தீவிரம் காட்டத் துவங்கினேன். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரித்தது. பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து வேளாண்மை கல்லுாரியில் சேர்ந்து பட்டம் பெற்றேன்.இப்போது என் வயது, 61; தமிழக வேளாண் துறையில் இணை இயக்குனராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். வாழ்வில் பெற்றுள்ள இந்த உயர்வுக்கு, பள்ளியில் அந்த நண்பன் காட்டிய அக்கறையே அடித்தளமாக அமைந்தது. ஊக்கமும், உற்சாகமும் தந்தவனை நன்றியுடன் மனதில் பதித்துள்ளேன்.- தி.சு.பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !