உள்ளூர் செய்திகள்

பிரம்படி செய்த மாற்றம்!

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியராக இருந்த ராமசாமி, மிகவும் கண்டிப்பானவர். ஆங்கில இலக்கணத்தை எளிதில் புரியும்படி விளக்குவார். கேள்விக்கு சரியாக பதில் கூறாவிடில், பிரம்படி தான். சாரணர் இயக்க பொறுப்பில் இருந்த அவர், மாணவர்கள் ஆடை அணிவதிலும், பொத்தான் போடுவதிலும் கவனம் செலுத்துவார். இது என், மாணவ பருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.அவருடைய ஒழுக்கம், பண்புகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறி, 1970ல், அத்திப்பட்டு, ஊராட்சி மன்ற தலைவரானேன். பின், அஞ்சல் துறையில் பணியாற்றி, 2012ல் ஓய்வு பெற்றேன். தற்போது என் வயது, 78. அண்ணாமலை பல்கலையில், ஊரக வளர்ச்சி துறையில் உழவர் மன்ற தலைவராக இருந்த போது, அப்போதைய கடலுார் மாவட்ட கலெக்டர் சுகன்தீப் பேடியின் பாராட்டையும் பெற்றேன். இதற்கெல்லாம் காரணமான வகுப்பு ஆசிரியர் ராமசாமிக்கு, நான் வகித்த பல்வேறு பொறுப்புகளையும், அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்புகளையும் காணிக்கையாக்கிவிட்டேன். - என்.துரைராஜன், கடலுார். தொடர்புக்கு: 99432 73446


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !