பொறுமையின் பெருமை!
டில்லி, ஜனக்புரி தமிழ் பள்ளியில், 2003ல், 9ம் வகுப்பு படித்த போது தலைமையாசிரியராக இருந்தார் நடராஜன். அனைத்து மாணவர்களுக்கும், தலா, 10 குலுக்கல் பரிசுக் கூப்பன்களை கொடுத்து பொங்கல் விழா நிதி சேகரிக்க உத்தரவு போட்டார். ஒன்றின் மதிப்பு, 10 ரூபாய். விற்க இயலாவிட்டால் மாணவரே அதற்குரிய பணம் செலுத்தி விட வலியுறுத்தப்பட்டிருந்தது.என்னால் விற்க முடியவில்லை. அவற்றுக்கு பணம் தரும் அளவு, தந்தையிடம் வசதி இல்லை. செய்வதறியாது கலங்கி நின்றேன். வேறு வழியின்றி கடனாக, 100 ரூபாய் வாங்கித் தந்தார் தந்தை. அதை நிர்வாகத்திடம் கொடுத்து பொறுப்பை நிறைவேற்றினேன்.என்னிடமிருந்த பரிசு கூப்பன்களில், குடும்பத்தினர் பெயர் எழுதி பெட்டியில் போட்டேன். குலுக்கலில் முதல் பரிசாக, கலர், 'டிவி' எனக்கு கிடைத்தது. என் தங்கைக்கு இரண்டாம் பரிசு விழுந்தது. குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியதால், 'டிவி' பெட்டியை விற்றோம். அந்த பணத்தில் பாடப் புத்தகங்கள் வாங்கி மனம் ஊன்றி படித்தேன். புதுச்சேரி மாநில அளவில் முதன்மை மாணவனாக தேர்ச்சி பெற்றேன். பெங்களூருவில் சிறந்த கல்லுாரியில் சேரும் வாய்ப்பும் கிடைத்தது.என் வயது, 35; பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதுநிலை மேலாளராக பொறுப்பு வகிக்கிறேன். பள்ளியில் பரிசு கூப்பன்களை விற்க கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட நெருக்கடியே, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த துாண்டியது. அதற்கு, காரணமாக இருந்த தலைமையாசிரியரை நன்றியுடன் போற்றுகிறேன்.- ஆர்.சிவராமகிருஷ்ணன், பெங்களூரு.தொடர்புக்கு: 73378 24992