உள்ளூர் செய்திகள்

புராஜெக்ட் ஓ (1)

கா லை, 9:00 மணி - அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவிழா போல களை கட்டியிருந்தது. பத்தாம் வகுப்பு 'பி' பிரிவு, எப்போதும் போல, அமளிதுமளியாக இருந்தது. வகுப்பின் கடைசி பெஞ்ச் தான், கதிருக்கும், அவனது சகாக்களுக்கும் தலைமையகம். அங்கு, வகுப்பின் ஒரு மூலையில் கதிர், நண்பர்களுடன் சேர்ந்து, பெஞ்ச் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தான். நோட்டுப் புத்தகத்தை மட்டையாக மாற்றி, ரப்பர் அழிப்பானை பந்தாக வைத்து ஆடிய ஆட்டத்தில் அனல் பறந்தது. பெஞ்சின் மீது ஒரு நோட்டுப் புத்தகத்தை மட்டையைப் போல பிடித்தபடி, கதிர் நிற்க, எதிரே மணி, அழிப்பானை பந்து போல வீசினான். ஓங்கி அடித்தான், கதிர். 'போர்....' கூச்சலிட்டது, நண்பர் குழாம். ''டேய் கதிர்... அது, போர் இல்லடா, கோட்டுக்கு உள்ள தான் விழுந்திச்சு...'' என்று கத்தினான், ஒருவன். சிரித்தபடி, ''அதெல்லாம் ஒத்துக்க முடியாது. கோடு மேல அந்த பக்கமா தான் வி ழுந்திச்சு...'' என்று சொல்லி, மீண்டும் போடப்பட்ட அழிப்பானை லாவகமாகத் தட்டினான், கதிர். மறுபுறம் தோழியருடன், ஏதோ சீரியசான விவாதத்தில் இருந்தாள், அஞ்சலி. அது பாடத்தைப் பற்றியது அல்ல என்பது, அவர்களது உற்சாகமான கை அசைவுகளிலே தெரிந்தது. ''அந்த பாட்டு இருக்கே... அதோட, 'ஸ்டெப்ஸ்' இப்படித் தான் வரும்...'' கைகளை அசைத்து செய்து காட்டினாள் அஞ்சலி. சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர், அவளது தோழியர். ''டேய் குமார், இந்தத் தடவை, 'சிக்சர்' பாருடா...'' கத்தியபடியே, அழிப்பானை கதிர் ஓங்கி அடிக்க, அது, காற்றில் கைகளால், 'ஸ்டெப்ஸ்' போட்டுக் கொண்டிருந்த, அஞ்சலி தலையில் பட்டுத் தெறித்தது. ''ஆ... ஆ... ஆ...'' அஞ்சலி அலறிய சத்தம், வகுப்பறையின் இரைச்சலையும் தாண்டி ஒலித்தது. கோபமாகத் திரும்பிப் பார்த்தாள், அஞ்சலி. கண்கள் சிவந்திருந்தன. கையில் நோட்டுடன் பரிதாபமாகப் பார்த்தான், கதிர். ''சாரி அஞ்சலி... மணி தான், 'லெக்-ஸ்பின்' போடுறேன்னு சொல்லி, 'ஆப்-சைடு'ல வீசிட்டான். அடி பலமா...'' ''அடி பலமான்னு கேக்குறான் பாரு... உன் டேபிள்லயே விளையாட வேண்டியது தானடா...'' ''சிக்சர் அடிச்சா டேபிளைத் தாண்டி தானே போகும், அஞ்சலி... நீ கொஞ்சம் விலகி நின்னு இருக்கலாமே...'' ''கொழுப்புடா உனக்கு...'' க திரும், அஞ்சலியும் வகுப்பு தோழர்கள் மட்டுமின்றி, குடும்ப நண்பர்களும் கூட. இருவரின் பெற்றோரும் மருத்துவர்கள். மிகப்பெரிய தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். அதிலும், குறிப்பாக, மருத்துவப் பட்டம் பெற்ற பின், இருவரது அம்மாக்களும், 'பேத்தாலஜி' எனும் நோயியல் உயர் கல்வியை ஒரே கல்லுாரியில் படித்திருந்தனர். இருவருமே புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள். கதிரும், அஞ்சலியும் படிப்பிலும் சமர்த்தாக இருந்தனர். எல்லா பாடங்களிலும், 100ம், 100ஐ நெருங்கியுமே மதிப்பெண் எடுப்பர். இந்த ஆண்டு பொதுத் தேர்வில், மாநில முதலிடம் யார் பெறுவது என்பதில், இருவருக்கும் போட்டி இருக்கிறது. பள்ளி நிர்வாகமும் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ப ள்ளியில் வகுப்பு துவங்குவதற்கான மணி ஒலித்தது. ஆனாலும், மாணவர்களின் அலப்பறை ஓயவில்லை. அந்த நேரம், வகுப்பின் அன்றைய காவலாளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மாணவன் புகழேந்தி, மூச்சிரைக்க ஓடி வந்தான். வராண்டாவில் நின்று, ஆசிரியர் வருவதைக் கண்காணித்து, தகவல் சொல்ல வேண்டியது, அன்று, அவனது பொறுப்பு. மாணவியர் தவிர்த்து, மாணவர்கள் மட்டும் சுழற்சி முறையில் தினமும், ஒருவர் இந்த பொறுப்பை ஏற்பர். ''ஆபத்து, ஆபத்து... எல்லாரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுங்க...'' புகழேந்தி எச்சரிக்க, வகுப்பறையில் சட்டென சத்தம் அடங்கியது. ''யார்ரா, மேத்ஸ் சாரா...'' அவசரமாக நோட்டை மேஜைக்குள் மறைத்தபடி கேட்டான், கதிர். ''இல்லடா... தமிழம்மா வர்றாங்க...'' அதுவரை சந்தைக்கடை போல இருந்த வகுப்பறை, அடுத்த நொடி, தியான மண்டபம் போல மாறியது. அனைவரும், அவரவர் இடங்களில் அமர்ந்து, தீவிரமாகப் படிப்பது போல, பாவனை செய்தனர். வகுப்பிற்குள் நுழைந்தார், தமிழாசிரியை வசந்தா. அந்த அமைதியைப் பார்த்து புன்னகைத்தார். ஒரு சுனாமிக்கு பின் தான், இந்த அமைதி வந்திருக்கும் என்பது அவருக்கு தெரியும். மாணவர்கள் எழுந்து, 'வணக்கம் அம்மா...' என்று சொல்ல, ''மகிழ்ச்சியான காலை வணக்கம்...'' என புன்னகைத்தார், தமிழாசிரியை. ''என்னப்பா... எல்லாரும் ரொம்ப தீவிரமா தமிழ் படிக்கிறீங்க போல...'' கிண்டலாக கேட்க, வகுப்பில் மெல்லிய சிரிப்பலை எழுந்தது. பி ரார்த்தனை நேர மணி ஒலித்தது. மாணவர்கள் எழுந்து நின்றனர். ஒலிபெருக்கியில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து பள்ளி பிரார்த்தனைப் பாடலும் ஒலித்தன. அன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளை வாசித்தாள், ஒரு மாணவி. தலைமை ஆசிரியர், மாணவருக்கான பொதுவான அறிவுரைகளை வழங்கிய பின், தேசிய கீதம் ஒலித்து முடித்ததும், மாணவர்கள் அமர்ந்தனர். ''உங்க தமிழ் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். பலரும் சரியாக விடை எழுதவில்லை. நிறைய ஒற்றுப்பிழைகள் உள்ளன. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், இந்தத் தவறுகளை குறைக்கலாம். கதையோ, கட்டுரையோ உங்களுக்கு பிடித்த எதையாவது அன்றாடம் வாசிக்கப் பழகுங்க...'' என்றார், தமிழாசிரியை. ஒப்புதலாக தலையசைத்தனர், மாணவர்கள். ''அறிவியலுக்கும், கணிதத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதாது. தாய்மொழியையும் ஆர்வமுடன் படிக்க வேண்டும்...'' இந்த அறிவுரை வகுப்பில் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கே, கதிரையும், அஞ்சலியையும் ஒரு விசித்திரமான தேடலுக்குள் இழுத்துப் போக இருக்கும், விந்தையான மர்மம் துவங்க காத்திருந்தது. - தொடரும்... - ஜாரா நரேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !