உள்ளூர் செய்திகள்

புராஜெக்ட் ஓ! (15)

முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்க மாணவ - மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக, 'இன்குபேட்டரில்' வைத்து சென்ற முட்டை மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆராய்ந்த போது முட்டை ஓடு குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆய்வகத்தை தீவிரமாக கண்காணித்த மதிவதனி, உயிரி உருவானதற்கான சாத்தியத்தை கண்டு, அதை ஆராய முற்பட்டது குழு. இனி - ''மேம் இந்தக் கோடு, இன்குபேட்டர் வரை இருக்கு...'' என்றாள் அஞ்சலி. ''ஓ...'' என்றார், யோசனையுடன் மதிவதனி. ''மற்றொரு கோடு, அலமாரி வரை போகுது மேம்...'' என்று தகவல் சொன்னான், கதிர். ''அப்போ ஏதோ ஒண்ணு நகர்ந்திருக்கு...'' அங்கே மீண்டும் அமைதி நிலவியது. ''நம்ம 'புராஜெக்ட் ஓ' மூலம் உருவான உயிரியோட தடயமா இருக்குமோ...'' என்று, கிசுகிசுத்தாள், அஞ்சலி. ''ஆனா, ரெண்டு கோடு இருக்கே... அப்போ ரெண்டு உயிரி உருவாகி இருக்கா...'' என்று தயக்கத்துடன் கேட்டான், பரத். ''இல்ல... ஒரே ஒரு உயிரியா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்...'' தீர்க்கமாக கூறிய மதிவதனி, ''அது, இன்குபேட்டர் பக்கத்துல இருந்து, இங்கே வந்திருக்கலாம்; அப்புறம், இங்கிருந்து அலமாரி பக்கம் நகர்ந்து இருக்கலாம்...'' என்றபடி சில நொடிகள் யோசித்து, ''அலமாரி பக்கத்துல இருந்து, இங்கே வந்திட்டு... அப்புறம், இன்குபேட்டர் பக்கம் போய் இருக்கலாம்...'' என விளக்கினார். அதைக் கேட்டதும் அனைவருக்கும் ஐஸ் கட்டிகளை விழுங்கியது போல ஜில்லிட்டது. ஒரு கனத்த அமைதி நிலவியது. அதே நேரத்தில், மதிவதனி மனதில் திடீரென்று ஒரு விஷயம் மின்னியது. மாணவன் அரவிந்த் விரலில் ஏற்பட்ட கீறல் மற்றும் தரையில் சிந்தியிருந்த ரத்தம் நினைவுக்கு வந்தது. ''அரவிந்த்...'' என்றார், மதிவதனி. ''எந்த அரவிந்த் மேம்...'' ''இன்னிக்கு மத்தியானம், 12ம் வகுப்பு, 'சி' பிரிவு அரவிந்த். இந்த மேஜையில் தான் செய்முறை பண்ணினான். ஒரு, 'ஸ்லைடை' உடைச்சிட்டான். அந்த கண்ணாடி குத்தி, கையிலிருந்து ரத்தம் சிந்திச்சு. அது இந்த இடம் தான்... இதே இடம் தான்...'' எல்லாருடைய பார்வையும் தரையை நோக்கித் திரும்பின. குமாரின் முகம் வெளிறியது. ''அப்போ... ரத்த வாசனைக்காக இங்கே வந்திருக்குமா...'' என்றார், மதிவதனி. யாரும் உடனே பதில் சொல்லவில்லை. அந்த அமைதி அச்சப்படுத்தியது. ''அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம். நாம நிதானமாக யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய சமயம் இது. ஒரு நிமிஷம்...'' என்றபடி, தன் மொபைலை எடுத்தார், மதிவதனி. ''யாருக்கு மேம்...'' என்றாள், அஞ்சலி. ''முருகேசன் அண்ணனுக்கு... அவர் கிட்ட ஒரு விஷயம் உறுதிப்படுத்திக்கணும். யாரும் பேச வேண்டாம். போனை, 'ஸ்பீக்கர்'ல போடுறேன்...'' என்றபடி, அவருக்குப் போன் செய்தார் மதிவதனி. பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. சில நொடிகளில் எதிர்முனையில் முருகேசனின் குரல் கேட்டது. ''சொல்லுங்க டீச்சர், எதாவது அவசரமா, நான் வரணுமா...'' ''இல்ல அண்ணே, ஒரு விபரம் தெரிஞ்சுக்கத் தான், போன் பண்ணினேன்...'' ''என்ன டீச்சர், கேளுங்க...'' ''இன்னிக்கு அரவிந்த், ரத்தம் சிந்தின இடத்தை நீங்க துடைச்சீங்கள்ல...'' ''அந்த, 12ம் வகுப்பு, 'சி' பிரிவா...'' ''ஆமா அண்ணே...'' ''அந்த கடைசி வரிசை மேஜை தானே... துடைச்சேனே, டீச்சர்...'' ''அப்போ தரையில ரத்தம் இருந்ததா...'' ''இல்லையே, டீச்சர்...'' அந்த பதிலை கேட்டதும், மதிவதனியின் புருவம் மெதுவாகச் சுருங்கியது. ''என்ன சொல்றீங்க அண்ணே...'' ''நீங்க கூப்பிட்டப்ப நான், உள்ளே இருந்தேன். அஞ்சு நிமிஷத்துல வந்துட்டேன், டீச்சர். ஆனா, அங்கே ரத்தம் எதுவும் இல்ல. தரையில கொஞ்சம் கொழ கொழப்பாக ஈரம் மட்டும் தெரிஞ்சது. அதை மட்டும் துடைச்சேன். ஏன் டீச்சர்...'' ''இல்ல, திடீர்னு ஞாபகம் வந்தது. அதான் சுத்தம் பண்ணுனீங்களா, இல்லையான்னு கேட்டேன்...'' என்று சமாளித்து, உரையாடலை துண்டித்தார். அங்கே நின்றிருந்த ஐந்து பேரும் உறைந்து போயினர். ''மேம்... அப்படின்னா, நம்ம... 'புராஜெக்ட் ஓ' மூலம் உருவாக்கப்பட்ட உயிரி, ரத்தத்தை உறிஞ்சி இருக்குமா?'' என்றாள் அஞ்சலி. ஆய்வகத்தின் அமைதி இன்னும் கனத்தது. ''நீங்க சந்தேகப்படுறது புரியுது. ஆனா, எந்த முடிவுக்கும் உடனே வரக்கூடாது...இதுவரைக்கும் அது யாரையும் தாக்கல. அரவிந்துக்கு காயம் ஏற்பட்டது, உயிரி கடிச்சதால இல்லை என்பதை முக்கியமா கவனிக்கணும்...'' என்ற மதிவதனியின் எண்ணங்கள் வேகமாக ஓடின. ''அதுவும் சரி தான் மேம்...'' என்றாள், அஞ்சலி. ''சில நிகழ்வுகளுக்கான தடயங்களை மட்டும் வச்சு, உயிரி ஆபத்தானதுங்கிற முடிவுக்கு வந்திடக் கூடாது...'' என்றார் மதிவதனி. ''ஆனா, அது ரத்தம் குடிக்கிற மாதிரி இருந்தா...'' என்றான், குமார். அந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆய்வகத்தில் அமைதி நிலவியது. - தொடரும்- ஜாரா நரேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !