உள்ளூர் செய்திகள்

புத்தியை தீட்டு!

கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியர் இளங்கோவன், மாணவ, மாணவியரை கண்காணிக்க, இரண்டு பேரை நியமித்து இருந்தார். முதல் பெஞ்சில் இருந்த நான் அக்கம், பக்கம் திரும்பினால் கூட, தேவையின்றி பேசியதாக, என் பெயரை கரும்பலகையில் எழுதி வைத்து விடுவர்.அன்று, நோட்டு புத்தகம் தேவைப்பட்டதால் துண்டு சீட்டில் எழுதி, தோழியிடம் கொடுத்தேன். கண்காணித்த மாணவர்கள் சீட்டை பிடுங்கி உரக்கப் படித்தனர்.கடும் கோபத்திலும், பொறுமையுடன் அமைதியாக இருந்தேன். மறுநாளும், இதேபோல் துண்டு சீட்டில் எழுதி கையில் வைத்திருந்ததை 'வெடுக்'கென பிடுங்கி, மிகுந்த சத்தமாக ஆர்வமுடன் படித்தனர். அதை கேட்டதும், 'கொல்...' என வகுப்பே சிரித்தது.சீட்டில், 'சுப்பிரமணி கொப்பரை தேங்காய். உடைத்து பார்த்தால், அழுகல் தேங்காய்; தங்கவேல் தகரப் பெட்டி; உடைத்து பார்த்தால், பூனைக்குட்டி...' என, கண்காணித்த இருவர் பெயரையும் எழுதியிருந்தேன். அத்துடன், என்னை கண்காணிப்பதை தவிர்த்து விட்டனர். என் வயது, 45; இல்லத்தரசியாக இருக்கிறேன். புத்தியை தீட்டினால், எந்த செயலிலும் வெற்றி ஈட்டலாம் என்பதை, அந்த நிகழ்வில் இருந்து கற்றுக் கொண்டேன்.- சரிதா அன்பழகன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !