உள்ளூர் செய்திகள்

சலிப்பற்ற வாசிப்பு!

மதுரை, கனகவேல் காலனி, வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில், 2009ல், 7ம் வகுப்பு படித்தேன்.அறிவியல் ஆசிரியையாக இருந்தார் மஞ்சுளா. வகுப்பில் நடத்தும் பாடத்தை, நடைமுறை வாழ்வுடன் பொருத்தி, பயன்படும் விதத்தை தெளிவாக எடுத்துரைப்பார். அது தொடர்பாக மேலும் வாசிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்வார். ஒவ்வொரு முறையும் அவரை சூழ்ந்தபடி சந்தேகங்கள் கேட்போம். எந்த புறக்கணிப்பும் இன்றி, பொறுமையுடன் பதில் தருவார். எப்போதும் சலித்துக் கொண்டதேயில்லை.ஒரு நாள், 'குறிப்பிட்ட முறை தான், ஒருவரிடம் சந்தேகம் கேட்க முடியும். ஆனால், எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்களை புரட்டி ஐயங்களை நிவர்த்திக்கலாம். பக்கங்களை திருப்பும் போது, ஒருபோதும் அவை சலிப்பதில்லை...' என புன்னகை மாறாமல் கூறினார். அது, என் காதுகளில் ஒலித்த படியே இருக்கிறது. வாசிப்பில் அலாதி பிரியம் அவராலே ஏற்பட்டது.என் வயது, 27; தனியார் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசு தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருகிறேன். வகுப்பறையில் அந்த ஆசிரியை கற்பித்த அணுகுமுறையை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறேன். கற்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தியவரை மனதால் வணங்கி நன்றியை சமர்ப்பிக்கிறேன்.- தி.ஸ்ரீநிதி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !