உயர்வுக்கு வழி!
கடலுார் மாவட்டம், நெய்வேலி அரசு உயர்நிலை பள்ளியில், 1973ல், 11ம் வகுப்பு படித்த போது மூன்றுமுறை தோல்வி அடைந்தேன். நான்காவது முறை வென்று, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்தேன். கல்வியில் சிறந்தோருக்கு அங்கு மதிப்பளிப்பதைக் கண்டேன்.உடனே சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரியில் பகுதி நேர டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். முதல்நாள் வகுப்பில் பேராசிரியர் மோகன், ‘வேலையில் இருந்தபடியே படிக்க வந்திருக்கிறீர்கள். இதற்கு முன், நீங்கள் எப்படி படித்தீர்கள் என்பது தெரியாது; இனி எப்படி படிக்கலாம் என்பதற்கு என்னை முன் உதாரணமாக கொள்ளுங்கள்...‘நான் பள்ளி இறுதி வகுப்பு முடித்து பி.யூ.சி.,யில் மூன்றாம் வகுப்பில் தேர்வு பெற்றேன். பின், பி.எஸ்சி., பட்டம் இரண்டாம் வகுப்பிலும், எம்.எஸ்சி., முதுகலை படிப்பில் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றேன். எவ்வளவு பின்தங்கி இருந்தாலும் முயற்சித்தால் முன்னேறலாம்...’ என அறிவுரைத்தார்.அதை பின்பற்றி முயன்று, முதல் வகுப்பில் வென்றேன். தொடர்ந்து, அண்ணாமலை பல்கலைக் கழக மாலை நேர வகுப்பில் படித்து, பி.இ., உட்பட பட்டங்கள் பெற்றேன்.என் வயது, 68; நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கூடுதல் முதன்மை மேலாளராக பதவி உயர்ந்து ஓய்வு பெற்றேன். என் உயர்வுக்கு ஊக்கமளித்த பேராசிரியர் மோகன், சிதம்பரத்தில் நலமுடன் வாழ்கிறார். அவரை நன்றியுடன் போற்றுகிறேன்.- மு.பாண்டியன், சென்னை.தொடர்புக்கு: 99523 28676