சிம்ம சொப்பனம்!
மதுரை, சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில், 1949ல், 9ம் வகுப்பில் சேர்ந்த போது நடந்த சம்பவம்...வகுப்பில் ஆங்கில பாடம் தான் சிம்ம சொப்பனமாக இருந்தது. தலைமையாசிரியர் எஸ்.கே.குப்புசாமி எங்கள் வகுப்பாசிரியராகவும் இருந்தார். அன்று, 'ஆங்கில நான் டிட்டேய்ல்' பாடத்தில் 'ஆலிவர் ட்வஸ்ட்' என்ற பிரபல நாவலை நடத்தினார். அதில் ஆதரவற்றோர் விடுதியிலிருந்து தப்பிய கதாநாயகன் அடைந்த கஷ்டங்கள், துன்பங்களை உருகும்படி சொல்லிக் கொடுத்தார். ஆங்கிலம் கற்பதில் தனி ஆர்வம் ஏற்பட்டது. எளிமையாக வாக்கியம் அமைக்கவும், அர்த்தம் புரிந்து படிக்கவும், இலக்கணத்தை எளிதாக புரியவும் தனி கவனத்துடன் பயிற்றுவித்தார். அதன் விளைவாக பொதுதேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதுடன் மொழி அறிவையும் வளர்க்க முடிந்தது. உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., வரை படிக்க உதவியது. தொழில் ரீதியில், பல நாட்டவருடன் சரளமாக பேசவும், கூச்சமின்றி பழகவும் வித்திட்டது. தற்போது, என் வயது, 87; மத்திய அரசின் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றேன். ஆங்கில மொழியில் நல்ல பயிற்சி தந்து சிறப்புடன் வாழ கற்பித்த நல்லாசிரியரை நன்றியுடன் வணங்குகிறேன்.- டி.ஆர்.சுப்ரமணியன், மதுரை.