சிறுமை செயல்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், வடக்கு மாங்குடி கிராம நடுநிலைப் பள்ளியில், 1967ல், 8ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியர் டி.எஸ்.ரங்கசாமி, வகுப்பாசிரியராகவும் இருந்தார்.அன்று, மிதிவண்டியிலிருந்து தவறி விழுந்து விட்டார். காயம் பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார்.சக மாணவர்களுடன் நலம் விசாரிக்க ஞாயிறன்று சென்றேன். வாங்கியிருந்த ஆப்பிள்களை கொடுத்தோம். கனிவுடன், 'இவ்வளவு துாரம் ஏன் வந்தீர்...' என செல்லமாக கடிந்து, ஐந்து ரூபாய் கொடுத்தார். பின், 'காயம் ஆறி நாளை கட்டு பிரித்து விடுவர். ஆண்டு தேர்வுக்குள் வந்து விடுவேன்...' என்று அனுப்பி வைத்தார்.நலம் விசாரிக்க சென்ற மூவரும் படிப்பில் சுமார் ரகம் என்பதால், 'இறுதித் தேர்வில் வெற்றி பெறுவோமா' என்ற சந்தேகம் இருந்தது. கருணை செய்வார் என நம்பியிருந்தோம். அதற்கு மாறாக, மூன்று பேருக்கும் தேர்ச்சி கிடைக்கவில்லை. கோபத்தில் சபித்தோம். அவரது செயல், 'சிபாரிசு செய்ய ஆள் பிடிப்பதோ, சிபாரிசு செய்பவரை அங்கீகரிப்பதோ மாபெரும் தவறு' என்பதை நிரூபித்தது.எனக்கு, 70 வயதாகிறது; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் நேர்மை அணுகுமுறைக்கே முன்னுரிமை கொடுத்தேன். தகுதிக்கும், திறமைக்கும் மதிப்பளித்த தலைமையாசிரியரை மானசீகமாக வணங்கி பெருமிதமடைகிறேன்.- எஸ்.ராஜேந்திரன், தஞ்சாவூர்தொடர்புக்கு: 99443 47407