ஸ்கைலேப்!
தி ருவாரூர் மாவட்டம், குடவாசல், வடமட்டம் உயர்நிலைப் பள்ளியில், 1979ல் 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்... கணித ஆசிரியராக இருந்த கே.சந்திரமவுலி கண்டிப்பு மிக்கவர். அதே நேரம் மாணவர்கள் மீது அன்பு செலுத்துவார். அப்போது உலகத்தை அச்சுறுத்திய நிகழ்வு குறித்து பரபரப்பு நிலவியது. அது எங்கள் பள்ளியிலும் தொற்றியிருந்தது. விண்வெளி ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்பியிருந்த, 'ஸ்கைலேப்' என்ற விண்வெளி ஓடம், பணி முடிந்து பூமிக்கு திரும்பியது. அது நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகியதால் இந்திய நிலப்பரப்பில் ஜூலை 11, 1979ல் விழக்கூடும் என, கணித்திருந்தனர் விஞ்ஞானிகள். அதை பெரும் அச்சுறுத்தலாக உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தது உலகம். இந்திய பரப்பு என்பதால் பாதிப்பை தவிர்க்க தமிழகத்தில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்து வந்தன. அதே நாளில், 'ஜாமெட்ரி' என்ற வடிவியல் கணித பாடத்தை எங்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். எல்லாரும் ஒருவித இறுக்கத்துடன் இருந்தோம். யார் மீது ஸ்கைலேப்விழும் என்ற பயத்துடன் இருந்தபோது, 'ஜாமெட்ரி கணக்கு போட்டாச்சா...' என என்னிடம் கேட்டார் ஆசிரியர். வரைந்திருந்ததை காட்டி, 'ஐயா... ஸ்கைலேப் மாதிரி இருக்கு...' என்றேன். அதை கண்டதும் மனம் விட்டு சிரித்தார் ஆசிரியர். தொடர்ந்து, பயத்தை மறந்து எல்லாரும் சிரிக்க வகுப்பறை கலகலப்பானது. என் வயது 63. ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளில் ஏவுகணை சம்பந்தமான செய்திகளை படிக்கும் போதெல்லம், ஸ்கைலேப் பற்றிய நினைவு மனதில் நிழலாடுகிறது. பரபரப்பான சூழலிலும் வகுப்பை இயல்புடன் நடத்திய கணித ஆசிரியர் கே.சந்திரமவுலியை போற்றுகிறேன். - எல்.ரவி, தஞ்சாவூர். தொடர்புக்கு: 99521 13194