நம்பிக்கையுடன் முயல வேண்டும்!
மகேந்திரபுரி நாட்டை ஆண்ட மன்னன் மணிவர்மன், மக்களுக்கு புதுமையான போட்டி ஒன்றை நடத்த எண்ணினான். தீவிரமாக சிந்தித்து, 'அரண்மனை கோட்டையின் கதவை, கைகளால் தள்ளி திறப்பவருக்கு நாட்டின் ஒரு பகுதி வழங்கப்படும். போட்டியில் தோற்றால் கைகள் வெட்டப்படும்...' என அறிவிப்பை வெளியிட்டான் மன்னன். மக்கள் பலவாறாக இது பற்றி பேசிக்கொண்டனர். பயத்தால் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்தனர். அந்த நாட்டை சேர்ந்த இளைஞன் குணசீலன் மட்டும் துணிந்தான். போட்டியில் பங்கேற்று முயற்சி செய்ய முன்வந்தான். அதற்காக, கோட்டை வாசலுக்கு வந்தவனை பலரும் எச்சரித்தனர். 'தோற்றால் உன் கைகள் வெட்டப்படும். பின், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்...' ஊர்மக்கள் பேச்சு கேட்டு, 'ஐயா... போட்டியில் வெற்றி பெற்றால், ஒரு நாடு கிடைக்கும். நானும் ஒரு அரசனாக ஆவேன்; தோல்வியடைந்தால் கைகள் தானே போகும்... உயிரை இழக்க மாட்டேன் அல்லவா...' என கூறியபடி கோட்டை கதவை கைகளால் தள்ளினான். அது, சட்டென திறந்து கொண்டது. கதவு தாழிடப்பட்டிருக்கவில்லை. உட்புறமாக திறந்து தான் இருந்தது. குணசீலனின் துணிச்சலை வரவேற்று, 'தோற்று விடுவோமோ... எதையாவது இழந்து விடுமோ என எண்ணி, எதற்கும் முயற்சிக்காமல் மக்கள் பல சந்தர்ப்பங்களை விட்டு விடுகின்றனர். தன்னம்பிக்கையுடன் முயற்சிப்போர் வெற்றி பெறுகின்றனர்...' என கூறிய மன்னன், பரிசு வழங்கி கவுரவித்தான். பட்டூஸ்... நம்பிக்கையுடன் முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. - ஜே.அம்சபிரியா