தாத்தா, பாட்டி!
பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்தது. விடுமுறை விட்டதால் குதுாகலித்தனர் சிறுவர், சிறுமியர் ! இரவு பகலாக படித்து தேர்வு எழுதிய தனுஷ், இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க விரும்பினான். தந்தை வேணுவை அனுகினான்!''அப்பா... வார இறுதியில், எங்கையாவது வெளிய போய் வரலாமா...'' தனுஷ், பேசிக்கொண்டிருப்பது கேட்டு அம்மா ரேவதியும் வந்தாள்.''ஆமாங்க... அவன் கேட்கிறது சரி தான்... பாவம் அவனை எங்கேயும் கூட்டி போகவே இல்லை. இது பயனுள்ளதாக இருக்கட்டுமே...''பரிந்துரை கேட்டு, ''சரி... நீயே சொல்லு ரேவதி... எங்க போகலாம்... பயணத்தோட பயன் அடையற மாதிரி இடம் தேர்வு செய்...'' என்றார் தந்தை.சற்றே சிந்தித்த ரேவதி, 'ஏங்க... மாமல்லபுரம், மெரினா பீச் அப்படியே ஒரு ரவுன்ட் வந்தா என்ன...''''வாரக்கடைசி... பள்ளி விடுமுறை வேற... கூட்டம் அதிகமா இருக்கும். நெருக்கடியில் சிக்கி திணறனும்...''''ஆமா... அதுவும் சரி தான்...''''சரி... ஊட்டி...''''சபாஷ்... சரியான இடம்...'' ஆசையில் குதித்தான் தனுஷ்.''மழைக்காலத்துல மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்றது வேஸ்ட்... ஜூரம் தான் வரும்...''தலையில் கை வைத்து அமர்ந்தபடி, ''என்னால முடியலை... நீங்களே சொல்லுங்க...'' என்றாள் ரேவதி.''ரெண்டு பேரும் சும்மா சுத்தி பாக்குறத பத்தி தான் ஆலோசனை செய்றீங்களே தவிர, பயணத்தால நன்மை இருக்கான்னு நினைக்கவே இல்லையே...'' அம்மாவும், மகனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.''கிராமத்துல இருக்கிற தாத்தா, பாட்டியை பாத்து எவ்வளவு நாளாச்சு. அவங்களோட போன்ல பேசறதோட கடமை முடிஞ்சதா நினைக்கிறது தப்பு. இப்படி கிடைக்கிற விடுமுறையை கிராமத்துல தங்கி, அவங்களோட பழகினா நல்ல தகவல்கள் கிடைக்கும். இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைக்கும் இல்லையா...''அம்மாவும், மகனும் உண்மையை உணர்ந்து மகிழ்ந்தனர்!''உடனே ரயிலுக்கு முன்பதிவு செய்திடலாம்...'' என்றாள் ரேவதி.பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த முன்பதிவு ரயில் டிக்கெட்டை காண்பித்த அப்பா, ''தனுசுக்கு லீவு விட்டப்பவே ரெடியாகிட்டேன்...'' என்றார்.''ஹாய்... ஜாலி... கிராமத்தில போய் தாத்தா, பாட்டியை பாக்க போறோம்!''குதுாகலித்தான் தனுஷ்.குழந்தைகளே... முதியவர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு செயல்படுவோம்.- எம்.பி.தினேஷ்