அலெக்சா!
பூபதி, படிப்பில் படு சோம்பேறி; எப்போதும், ஒருவித அலுப்பு குடி கொண்டிருக்கும். வீட்டுப்பாடமாக வாய்ப்பாடு எழுதி சமர்ப்பிக்க கூறியிருந்தார் கணித ஆசிரியர்.எழுத ஆர்வமின்றி இருந்தான் பூபதி.வீட்டுப்பாடம் முடிக்காமல் வகுப்புக்கு செல்ல முடியாது; வெகுநேரம் யோசித்தவனுக்கு வழி கிடைத்தது.பிறந்த நாள் பரிசாக, அப்பா வாங்கி தந்திருந்த அலைபேசியில், 'அலெக்சா' என்ற மென்பொருளை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடித்தான்.''வாய்ப்பாட்டை தவறின்றி எப்படி எழுதினாய்...''ஆச்சரியத்துடன் கேட்டார் கணித ஆசிரியர்.மவுனம் சாதித்தான் பூபதி.''அலெக்சாவை பயன்படுத்தி தானே எழுதி இருக்கிறாய்...''அதட்டியதும், உண்மையை ஒப்புக் கொண்டான்.''துளியும் முயற்சிக்காமல், கேட்டு எழுதினால் வாய்ப்பாடு எப்படி மனதில் பதியும்; உன்னை நீயே ஏமாற்றினாய். தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது தான் கணினி மென்பொருள். அதை தவறாக உபயோகப்படுத்தினால் அறிவு வளராது. சோம்பேறித்தனம் தான் பீடிக்கும்; இனி, இப்படி செய்யாதே...'' என அறிவுரைத்தார்.ஆசிரியரின் வார்த்தைகள் பூபதியை வெட்கமுற செய்தது.''என்னை மன்னியுங்கள் ஐயா; இனி, இதுபோல் செய்ய மாட்டேன்...''குரல் தழுதழுக்க கூறி வருந்தினான் பூபதி.முதுகில் தட்டிக் கொடுத்து அமர வைத்தார் ஆசிரியர்.பட்டூஸ்... அறிவை வளர்க்க மின்னணு கருவிகளை சரியான வழிமுறையில் பயன்படுத்த வேண்டும்!என்.கிருஷ்ணமூர்த்தி