உள்ளூர் செய்திகள்

தண்டனையும், பாடமும்!

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம், கொசவன்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பில் படித்த போது நடந்த சம்பவம்... வகுப்பாசிரியராக இருந்த ஜோதிசைனம் ஆங்கில பாடமும் கற்பிப்பார். மிகவும் சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார். அன்று வகுப்பில் என்னிடம் கேள்வி கேட்ட போது அலட்சியமாக, 'புரியவில்லை...' என்று கூறினேன். ஆர்வத்துடன் அதே பாடத்தை விளக்கி மீண்டும் கேட்டார். பதில் தெரியாததால், 'கேட்கவில்லை...' என முனகினேன். பொறுமை இழந்த ஆசிரியர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வகுப்பறையே திகைத்தது. அதை அவமரியாதையாக கருதி வேதனையுடன் நடுங்கியபடி அமர்ந்திருந்தேன். வகுப்பு முடிந்த பின் தனியாக அழைத்து, 'என் நோக்கம் உன்னை தண்டிப்பது அல்ல; படிப்பதை துாண்டுவதற்கு தான்... ஆரம்ப கல்வியை தெலுங்கு மொழியில் படித்தவன் நீ... ஆங்கில பாடத்தில் தடுமாறுவது இயல்பு தான். அதற்காக பயந்து விடாதே... திறனை வளர்க்க பயிற்சி செய்...' என்று அறிவுரைத்தார். அந்த சொற்கள் உள்ளத்தை தொட்டன. அந்த தருணம் என் வாழ்க்கை பாதையை மாற்றியது. வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. விடாமுயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேறினேன். எனக்கு 74 வயதாகிறது. வேலுார் மாவட்ட மைய வங்கியில் முதுநிலை மேலாளராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். வகுப்பறையில் ஆசிரியர் ஜோதிசைனம் தந்த தண்டனை, என்னை மேல் நோக்கி நகர்த்தியது. வாழ்வின் திசையை மாற்றியது. வகுப்பில் அன்று அவரது கோபத்துக்கு இடையே மறைந்திருந்தது பாசம். அதை உணர்ந்திருக்காவிட்டால் வாழ்வில் இந்த நிலையை எட்டியிருக்க மாட்டேன். - ஜெ.முனிராஜுலு, குடியாத்தம். தொடர்புக்கு: 89511 77709


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !