உள்ளூர் செய்திகள்

உழைப்பே உயர்வு தரும்!

ஏப்.,14 தமிழ் புத்தாண்டுஉழைப்பு உயர்வு தரும் என்பது நம்பிக்கை சொற்றொடர். உழைப்பின் நோக்கம் அதற்குரிய பலனை அடைவதாகும். அந்த பலன் சிலருக்கு உடனடியாகவும், சிலருக்கு தாமதமாகவும் கிடைக்கும். ஆனால், எல்லாருக்கும் ஒரே நேரத்தில், சம அளவில் உழைப்பின் பலன் இந்த தமிழ் புத்தாண்டில் கிடைக்கும்.பிறக்கும் தமிழ் புத்தாண்டின் பெயர் விசுவாவசு. இதற்கு, 'உலக நிறைவு' என பொருள். உலகில் ஒவ்வொருவரும் மனநிறைவு பெறுவதை குறிக்கும். இந்த ஆண்டுக்குரிய ராஜா சூரியன்; மந்திரி சந்திரன். உலகம் தோன்றியதில் இருந்து, 365 நாளும் இந்த இரண்டும் உழைப்பின் உச்சத்தில் இருப்பதை உலகுக்கு உணர்த்துகின்றன. அவையே இந்த தமிழ் ஆண்டின் ராஜாவும், மந்திரியுமாக செயல்பட உள்ளன. அதனால் எல்லாருக்கும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்; மனநிறைவையும் அள்ளித் தரும்.தற்காலத்தில், வானிலை நிலவரம் நவீன கருவிகள் துணையுடன் கணிக்கப்படுகிறது. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால்... * எப்போது புயல் வரும் * எந்தநாளில் மழை வரும்* கடும் வெயில் எந்த நாள் சுட்டெரிக்கும்* சுனாமி எப்போது வரும் போன்ற தகவல்களை துல்லியமாக அறிவித்து விடுகிறது வானிலை மையம். பழங்காலத்தில் இத்தகைய வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் எந்த வசதியும் இல்லாத போதே வானிலை நிலவரத்தை கணித்தனர் அறிஞர்கள். அவ்வாறு கணித்ததை, 'பஞ்சாங்கம்' என்ற பெயரில் எழுதினர். அதை சித்திரை முதல் தேதியன்று, கோவில்களிலும், பொது இடங்களிலும் வாசித்தனர். இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வை ஒழுங்கு செய்து கொண்டனர் மக்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் ஆண்டு முழுவதும் சஞ்சரிக்கிறது, சூரியன். ஒரு ராசியில் ஒரு மாதம் இருக்கும். இதில் முதல் ராசியான மேஷத்துக்கு, சூரியன் வரும் சித்திரை முதல் நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. சூரியன்... * ரிஷபத்துக்கு மாறும் போது வைகாசி* மிதுனத்துக்கு மாறும் போது ஆனி மாதம் பிறக்கிறது.இவ்வாறாக, ஆறு மாதங்கள் இருக்கும். ஏழாவதாக, ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். இதை, 'ஐப்பசி விஷு' என சொல்வர். அதாவது, 'விஷு' என்ற சொல், 'சமமாக' என பொருள் தரும். சித்திரை முதல் புரட்டாசி வரை ஒரு பாகமாகவும், ஐப்பசி முதல் பங்குனி வரை மற்றொரு பாகமாகவும் இரு சமபங்கு கொண்டது தமிழ் ஆண்டு. பருவ காலங்களின் துவக்கமாகவும் உள்ளது. சித்திரை கோடையின் துவக்கம்; ஐப்பசி குளிரின் துவக்கம். இரண்டு விஷு நாட்களிலுமே, புனித நதிகளில் நீராடுவது மக்கள் வாழ்வில் முக்கியமாக உள்ளது.சித்திரை முதல்நாளன்று கோவில்களிலும், வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. பழ வகைகள், மஞ்சள் நிற பூக்களை தட்டில் அலங்கரித்து, திருவிளக்கின் முன் வைத்து, காலை எழுந்ததும் அதில் கண் விழிக்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது. இவ்வாறு செய்வது ஆண்டு முழுதும் இனிய நிகழ்வுகளுக்கு அடித்தளமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த விசுவாவசு ஆண்டு, உழைப்புக்கேற்ற பலன் தரும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! - தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !