உள்ளூர் செய்திகள்

வடையும், அல்வாவும்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், சம்பந்தம் உயர்நிலைப் பள்ளியில், 1971ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஆங்கில பாட ஆசிரியர் கே.ஆர்.ராமகிருஷ்ணன் நடத்தும் வகுப்பு வித்தியாசமாக இருக்கும். அன்றாடம் ஆங்கில நாளிதழை எடுத்து வந்து, 'லெட்டர்ஸ் டு எடிட்டர்' பகுதியை படிக்கச் சொல்வார். அதன் வழியாக எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பார். அன்றன்று வகுப்பை கவனித்து, நாளிதழுக்கு கடிதம் போல் எழுதச் சொல்வார். அதை புரியும் வகையில் விளக்குவார். நான் தயங்கிய போது, 'தப்பும் தவறும் வரத்தான் செய்யும்... உரிய பயற்சி பெற்றால் தான் அதை சரி செய்ய முடியும்...' என உற்சாகமூட்டினார். பயிற்சியில் தவறுகளை திருத்தி மதிப்பெண் போடுவார். மாணவ, மாணவியரின் தயக்கம், அச்சம், சபைக்கூச்சத்தை போக்கும் வகையில் செயல்படுவார். பள்ளி அருகே இரண்டு ஓட்டல்கள் இருந்தன. ஒன்றில் வடையின் சுவை பிரமாதமாக இருக்கும்; மற்றொன்றில் அல்வா அசத்தும். இவற்றை வாங்கி தந்து, சுவை வேறுபாட்டை விளக்கி ஆங்கில இலக்கிய உவமானம், உவமேயங்களை புரிய வைத்து வழிகாட்டினார். என் வயது 69; வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். இந்த உயர்வுகள் எல்லாம் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.ஆர்.ராமகிருஷ்ணன் தந்த கனிவான பயிற்சிகளால் கிடைத்ததாக போற்றுகிறேன். - ஆர்.நாகராஜன், சிதம்பரம்.தொடர்புக்கு: 98945 64605


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !