உள்ளூர் செய்திகள்

மந்திர சொற்கள்!

கரூர் மாவட்டம், புகளூர், காகிதபுரம் டி.என்.பி.எல்., மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 2005ல், 7ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியையாக இருந்த ஜெயந்தி காளிதாஸ் அன்று, திடீரென அழைத்து, 'ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க வேண்டிய மாணவி இன்று வர இயலவில்லை. அந்த இடத்தை நிரப்பு...' என அரங்கத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றார்.தமிழ் மொழியில் மட்டுமே மேடையில் பேசும் திறன் பெற்றிருந்தேன். அதனால், முன் தயாரிப்புக்கு போதிய அவகாசம் தேவைப்பட்டது. அதை எடுத்து கூற தயங்கியதால், மேடையேறி திக்கி, திணறி உளறினேன்.அன்று மதியம், ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்ற போது, 'மேடையில் இப்படி தான் பேசுவதா...' என கோபத்துடன் பலர் முன்னிலையில் கடிந்தார் தலைமை ஆசிரியை. அது அவமரியாதையாக பட்டது. நிதானமாக சிந்தித்து, தெளிவு பெற்றேன்.அவரது வார்த்தைகளை தவறை சரி செய்யும் மந்திரமாக ஏற்று, புதிய உத்வேகம் பெற்றேன்.ஜெயித்து காட்டும் உந்துதலுடன், ஆங்கில ஆசிரியை உதவி பெற்று, பயிற்சி எடுத்து வந்தேன். அடுத்து நடந்த ஆங்கில பேச்சுப் போட்டியில், முதல் பரிசை தட்டினேன்; தலைமை ஆசிரியையிடம் பாராட்டும் பெற்றேன்.என் வயது, 29; வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். பள்ளிப் பருவத்திலே நேர்மறையாக சிந்திக்கும் பயிற்சி பெற்றிருந்ததால், நீதிமன்றத்தில், ஆணித்தரமாக என் வாதங்களை எடுத்து வைக்க முடிகிறது. லட்சிய பாதையில் நடக்க வழிகாட்டிய தலைமை ஆசிரியையை நன்றியுடன் நினைவில் பதித்துள்ளேன்!- ஜி.இந்துமதி, கரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !