ஊக்கமும், ஆக்கமும்!
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் வட்டம், கீரனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1978ல், 8ம் வகுப்பு படித்த போது மாணவர் தலைவனாக இருந்தேன். வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க தமிழாசிரியர் க.கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தியிருந்த, 20 அம்ச வளர்ச்சி திட்டம் குறித்து, குறிப்புகளை தந்தார். அதை நன்கு படித்து, மனதில் பதித்து வரச் சொன்னார். பின், ஏற்ற இறக்கங்களுடன் மேடையில் பேசுவதற்கு, முறையான பயிற்சி தந்தார்.அந்த வழிகாட்டுதல்படி செயல்பட்டு போட்டியில் பங்கேற்றேன். என் பேச்சை பாராட்டி, 'கேம்லின்' பேனா ஒன்று பரிசாக தந்தனர். அது உத்வேகம் தந்தது. தொடர்ந்து படித்து, முதுகலை பட்டம் பெற்று, தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தேன். சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன்.பள்ளியில் அந்த ஆசிரியர் ஊட்டியிருந்த உற்சாகத்தால், இரண்டு கவிதை நுால்கள் படைத்தேன். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கையால் வாழ்த்து மடல் பெற்றேன்.என் வயது, 58; உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று, அமைதியாக வாழ்க்கையை அமைத்துள்ளேன். எங்கு சென்றாலும், பவுண்டன் பேனாவை பார்க்கும் போது அந்த தமிழாசிரியரின் நினைவு மனதில் நிழலாடுகிறது.- பெ.அரங்கசாமி, சென்னை.தொடர்புக்கு: 73389 93191