உள்ளூர் செய்திகள்

டூ இன் ஒன் சிறுகதை!

மனதில் உறுதி!அன்று, ஆதிபராசக்தி உயர்நிலைப் பள்ளி விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாணவ மாணவியர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சார்பாக மாநில அளவில், பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்ட முரளி, முதல் பரிசை வென்று பெருமை சேர்த்திருந்தான். அதை கொண்டாட தான் இந்த விழாக் கோலம்.மேடையில் ஏறிய தலைமை ஆசிரியர், ''பள்ளிக்கு தனி மகுடத்தை சூட்டி இருக்கிறான் முரளி. நம் பள்ளி தமிழகம் எங்கும், புகழ் பரப்பி தலை நிமிர்ந்து நிற்கிறது; இதைப்போல பெருமை சேர்க்கும்படி மாணவர்களை கேட்டு கொள்கிறேன்...'' என்றார். உற்சாகத்துடன் கரவொளி எழுப்பினர் மாணவர்கள்.முரளியை அழைத்து, ''உன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது யார்...'' என்றார் வகுப்பாசிரியர்.''என் தாத்தா தான்...''''தாத்தாவா... எப்படி சொல்ற...'' புரியாமல் கேட்டார் வகுப்பாசிரியர்.அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன... கடந்த ஆண்டு -விடுமுறையின் போது, சொந்த ஊரான திருத்தங்கலுக்கு சென்றிருந்தான் முரளி.கிராமத்தில் பொழுது போக்க வழி தெரியவில்லை. தந்தையின் அலைபேசியை எடுத்து விளையாடி கொண்டிருந்தான். அது கண்டு விசாரித்தார் தாத்தா.'போரடிக்குது, மொபைல் கேம் விளையாடி கொண்டிருக்கிறேன்...' 'அலைபேசியில், பாரதியார் கவிதைகள் எல்லாம் வராதா...' என்றார் தாத்தா.'கவிதைகளா...' 'அச்சமில்லை... அச்சமில்லை... உச்சி மீது வானிடிந்து...'பாடல் வரிகளை நினைவுபடுத்தினார் தாத்தா. 'ஓ... பாரதியார் பாடல்களா...'தாத்தா கூறியதை புரிந்து பதிவிறக்கம் செய்தான். அதை போட்டு காட்டினான். ஆர்வமாக கேட்டார். உடனே எல்லா பாரதியார் கவிதைகளையும் ஒலிக்கவிட்டான். அனைத்தும் அவன் கேட்கவும் வாய்ப்பாக அமைந்தது. அந்த பாடல்களை கேட்டவுடன் தன்னம்பிக்கையும், ஆர்வமும் பெருகியது. தாத்தா ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் அவற்றை ரசித்தது வியப்பை ஏற்படுத்தியது.பழந்தமிழ் இலக்கியங்களான ஆத்திசூடி, திருக்குறள் போன்ற நுால்களை வாசிக்கும் விருப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த வாசகசாலைக்கு அழைத்து சென்றார் தாத்தா. நுால்களை தேடி எடுத்து வாசித்தான். அது தொடர்ந்ததால், பல துறைகள் சார்ந்த அறிவைப் பெற்றான்.ஊரிலிருந்து திரும்பிய பின், ஆர்வத்தில் அரசு நுாலகம் சென்றான். படிக்க படிக்க தமிழார்வம் ஊற்றாய் பெருகியது. அப்போது, 'தினமலர் - பட்டம்' இதழ் அறிமுகமானது. அதையும் படிக்க துவங்கினான் முரளி. அறிவுப்பசிக்கு அறுசுவை தரும் உணவாக அமைந்தது.அந்தநேரம் தான், பொது அறிவுப்போட்டி அறிவிப்பு வெளியானது. அதில் பங்கேற்று எளிதாக வென்றான் முரளி.இதை, நினைவின் அடுக்கில் இருந்து எடுத்து கூறினான்.அவனை பாராட்டி, ''உன் தாத்தா தமிழார்வத்தை துாண்டி இருக்கிறார்; தொடர்ந்து புத்தகங்களை கற்றதால் நல்ல அறிவை பெற்றுள்ளாய். அந்த வழிமுறையே போட்டியில் வெற்றி பெற வைத்துள்ளது...'' என உற்சாகப்படுத்தினார் ஆசிரியர்.வணங்கி விடை பெற்றான் முரளி. அவனை பாராட்டும் வகையில், மாணவ, மாணவியர் எழுப்பிய கரவொளி விண்ணை பிளந்தது. குழந்தைகளே... மனதில் உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.************நிதானம்!''நாளை எனக்கு பிறந்தநாள்; பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும், எல்லாரும் கண்டிப்பாக எங்க வீட்டிற்கு வரணும்...''மகிழ்வுடன் அழைத்தான் நந்தன். உடன் இருந்தோர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.முகிலன், மகேஷ், முரளி, கண்ணன், விக்ரம், நந்தன் இணை பிரியாத நண்பர்கள். இவர்களின் தந்தையர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், குடும்பங்களில் நடக்கும் எல்லா விசேஷங்களிலும் தவறாது கூடுவது வழக்கம்.''கடந்த ஆண்டு, நந்தன் வீட்டில் பெரிய அளவில் கேக் தயாரித்தது நினைவிருக்கிறதா...'' என்றான் கண்ணன்.''அது மட்டுமா... அவன் தந்த, குலோப்ஜாமூன் தித்திப்பாய் இருந்தது; நெய் வாசனை ஆளை துாக்கியதே, இன்று நினைத்தாலும் நாக்கு இனிக்கிறதே...'' என்றான் விக்ரம்.கடந்த ஆண்டு நினைவை பேசி மகிழ்ந்தனர். அவர்களுடன் படித்த அசுவத், ''நானும், உங்களுடன் நந்தன் வீட்டிற்கு வரலாமா...'' என்றான்''தாராளமாக...''மகிழ்ச்சி அடைந்தான் அசுவத். அவன் ஏழை வீட்டு சிறுவன். தினமும் பசியாறவே அவன் பெற்றோர், சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. இதில், கேக், பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் வாங்க பணத்துக்கு எங்கே போவான்.மறுநாள் -பிறந்தநாள் விழா களைகட்டியது. சந்தோஷமாக வரவேற்றார் நந்தனின் அப்பா. விருந்தினர்களுக்கு முதலில், புதினாவும், எலுமிச்சையும் கலந்த ஜூஸ் தந்தனர். 'இதை குடித்தால் எப்படி நிறைய சாப்பிட முடியும்' சிந்தனையில் அவற்றை வாங்க மறுத்து விட்டான் அசுவத்.விழா நிறைவில் விருந்து சாப்பிட அமர்ந்தனர். வகை வகையான உணவுகள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியந்தான் அசுவத். மற்ற சிறுவர்கள், ஒன்றை சாப்பிட்டால் அவன் மூன்று சாப்பிட்டான்; இப்படி ஒவ்வொரு உணவிலும், இரண்டு, மூன்று என ஆசை அடங்காமல் சாப்பிட்டான்.பக்கத்தில் இருந்த முரளி, ''எப்படிடா இவ்வளவு சாப்பிடுற...'' என்றான்.''பேசாம இரு... என் பசி, எனக்கு தான் தெரியும்; இந்த மாதிரி உணவுகள் இருப்பதே எனக்கு இப்ப தான் தெரியும்...''''சரி... அதற்காக அளவுக்கு மீறி சாப்பிடாதே; வயிறு வலிக்க போகிறது; உடம்பு கெட்டு போயிடும்...''அசுவத்தை எச்சரித்தான் முரளி.இதை காதில் வாங்கமால் வயிறு முட்டும் அளவு சாப்பிட்டு வீடு திரும்பினான். நள்ளிரவில் திடீரென எழுந்து, ''வயிறு வலிக்கிறது...'' என கத்தினான் அசுவத்.வெந்நீர் குடிக்க கொடுத்த பின், ''நண்பர்களோடு பிறந்தநாள் விருந்தில் என்ன சாப்பிட்டாய்...'' என்றாள் அம்மா.''வித விதமான, ருசியான உணவுகள்... வயிறு நிறைய சாப்பிட்டேன்...'' ''வீட்டில் தயாரிக்கும் எளிய உணவு வகைகளை சாப்பிட்டு பழகிய உனக்கு, நெய்யும், பாலும், பழமும் அதிகமாக சேர்த்த உணவுகள் ஒத்துக்கொள்ளவில்லை. தேவையான அளவு மட்டும் சாப்பிட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அளவுக்கு அதிகமாகி விட்டதால் கெடுதலை தந்துள்ளது...'' என அறிவுரைத்தார்.அம்மாவின் அறிவுரையை மதித்து, அளவுடன் சாப்பிட முடிவு செய்தான் அசுவத்.செல்லங்களே... உடலுக்கு நலம் தரும் எளிய உணவுகளை உண்போம்!- பா.செண்பகவல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !