உள்ளூர் செய்திகள்

மகாவீரர்!

ஏப்ரல் 24 மகாவீரர் ஜெயந்திசமண சமயத்தில் குருவை, 'தீர்த்தங்கரர்' என அழைப்பர். இதன் பொருள், இறை நிலை பெற்றவர், வழிப்பாட்டுக்குரியவர் என்பதாகும். இப்படி ஞானநிலை அடைந்தோரின் சிலைகளை கோவிலில் நிறுவி, வணங்குவது சமண சமயத்தில் வழக்கமாக உள்ளது.சமண சமயத்தில், 24ம் தீர்த்தங்கரராக அவதரித்தவர், வர்த்தமான மகாவீரர். தற்போதைய பீகார் மாநிலம், வைசாலி மாவட்டம், குண்ட கிராமத்தில், கி.மு.,599ல் பிறந்தார். தந்தை சித்தார்த்தர் மன்னராக இருந்தார். தாய் திரிசால. செல்வ செழிப்புடன் வளர்க்கப்பட்டார் மகாவீரர்.சிறு வயதிலே ஆன்மிகத்தில் ஈடுபாடும், தேடலும் ஏற்பட்டது. யசோதை என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவருக்கு ஒரே மகள் பெயர் பிரியதர்ஷனா. தன், 30ம் வயதில் துறவறம் மேற்கொண்டார். தொடர்ந்து, 12 ஆண்டுகள் தியானம், வழிபாடுகளில் ஈடுபட்டார். சாலா என்ற மரத்தின் அடியில், 42ம் வயதில் ஞானம் பெற்றார். பெயரை, மகாவீரர் என மாற்றிக் கொண்டார்.சமண மதத்தை பரப்ப பயணங்கள் மேற்கொண்டார். இவரது எளிமையான சொற்பொழிவை கேட்க, கூட்டம் கூட்டமாக வந்தனர் மக்கள். இவரது காலத்தில் தான், சமண சமயக் கருத்துக்கள் இந்தியா முழுதும் பரவியது. உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். அதை போதிக்கவும் செய்தார். மகாவீரரை பின்பற்றியோர் ஜைனர் அல்லது சமணர் என அழைக்கப்படுகின்றனர். இவரது போதனைகள், தன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என்பவையாகும். மகாவீரர் பிறந்த தினம் அரசு விடுமுறை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அவரது போதனைகளை நினைவூட்டி, கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் இந்த நடைமுறை உள்ளது. கொல்லாமையை வலியுறுத்தும் வகையில், அவரது பிறந்த தினத்தில் இறைச்சி மற்றும் மதுக்கடைகள் மூடப்படும் வழக்கம் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.- வி.சி.கிருஷ்ணரத்னம்திரிரத்தினங்கள்!மகாவீரர் போதனைகள், திரி ரத்தினங்கள் எனப்படும். அவை... * எந்த உயிரினத்துக்கும் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்; எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும்; திருட்டு எண்ணத்தை ஒழித்து, செல்வம் மீது பற்றில்லாமல் இருக்க வேண்டும்* ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆத்மா உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவு கிடைக்கிறது. தீய செயல்களுக்கு, தீமையே சேர்கிறது. இதுவே, வினைப்பயன் எனப்படுகிறது. தீய வினை, மாயையில் சிக்க வைக்கிறது. அது மேலும் துன்பத்தை தரும்* துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகள் உள்ளன. சரியான நம்பிக்கை, அறிவு, நடத்தையை கடைபிடித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.இவையே மகாவீரரின் முக்கிய போதனைகள். அவற்றை வாழ்வில் கடைபிடிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !