உள்ளூர் செய்திகள்

தடைக்கல் தாண்டு!

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம், தம்பித்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 9ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியையாக இருந்த அலோசியஸ், அறிவியல் பாடமும் நடத்துவார். புரியும் வகையில் எளிமையாக கற்பிப்பார்.ஊருக்கு சற்று வெளியே, ஒதுக்குப்புறமாக இருந்தது பள்ளி. ஒரே தெருவில் வசித்த மாற்றுத்திறனாளி மகேஸ்வரியுடன் செல்வேன். அவளால், புத்தக பையை துாக்கியபடி நடக்க முடியாது. அதை நான் வைத்திருப்பேன். வழியில் கோவில் அருகே இளைஞர்கள் கும்பலாக அமர்ந்திருப்பர். மாணவியரை கேலி, கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது. எங்களையும் அதுபோல் செய்தனர். அவள் ஊனத்தை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்ததால், புண்பட்டு, மனம் உடைந்தாள் தோழி. பள்ளிக்கு வருவதை தவிர்த்து வந்தாள். இது குறித்து விபரம் அறிந்தார் வகுப்பாசிரியை. மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், தோழியின் வீட்டுக்கு என்னுடன் வந்தார். அவளது பெற்றோரை சந்தித்து, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின், தோழியிடம், 'உன் போன்றோர் மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்; யார் கிண்டல், செய்தாலும் செவி சாய்க்க கூடாது. லட்சிய பாதை மட்டுமே கண்ணுக்கு புலப்பட வேண்டும். வருந்துவதை விட்டு படித்து, பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து, சாதிக்க முயற்சி செய்...' என அறிவுரைத்தார்.தற்போது, என் வயது, 43; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார் தோழி. அந்த ஆசிரியை அறிவுரைத்தபடி, யாருடைய இழிசொற்களையும் காதில் வாங்காமல் முன்னேற்ற பாதையில் நடைபோட்டு வருகிறேன்.- ம.வசந்தி, விழுப்புரம்.தொடர்புக்கு: 96774 13716


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !