உள்ளூர் செய்திகள்

நெருக்கடி தவிர்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த வேதநாயகம், வகுப்பு துவங்கிய அன்று மாணவர்களின் பெயர், ஊர், குடும்ப விபரங்களை தெளிவாக கேட்டறிந்தார்.பின், 'சொல்லாமல் செய்வது தவம்; சொல்லிச் செய்வது அவம்; சொல்லியும், செய்யாதது சவம்...' என்ற வாக்கியங்களை கரும்பலகையில் அழகுற எழுதினார்.அந்த பொன்மொழிகளை விளக்கும் வகையில், 'எந்த செயலையும், பிறர் சொல்லாமல், அறிந்து செய்து முடிக்க வேண்டும். அதுவே சிறந்த வாழ்வுக்கு அடித்தளம்... ஏவா மக்கள் மூவா மருந்து... என்ற பழமொழிக்கு ஏற்ப, செயல்பட வேண்டும்...' என அறிவுரைத்தார்.பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் முடித்த பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். முழு மனதுடன் பணியில் ஈடுபட்டேன். என்னிடம் படித்த மாணவ, மாணவியருக்கு அந்த ஆசிரியர் போதித்த அறம் மிக்க வாக்கியங்களை விளக்கி, அதன்படி நடக்கும் வழிமுறைகளை கற்பித்தேன்.தற்போது, என் வயது, 75; வகுப்பறையில், அந்த ஆசிரியர் கூறிய அறக்கருத்துக்களை இன்றும் பின்பற்றி வருவதால், நெருக்கடி இன்றி வாழ்கிறேன்!- என்.முத்துராஜ், சென்னை.தொடர்புக்கு: 94452 26816


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !