உள்ளூர் செய்திகள்

புத்திசாலி வைத்தியர்!

ஒரு ராஜா தான் நோய்வாய்ப் பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகமும், கண்களும் பிரகாசமாக இருந்தன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டும், இரவில் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டும் இருந்தார். ஆனாலும், தாம் நோய்வாய்ப் பட்டிருப்பதாக அவர் சொன்னார். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தனர். ஒருவராலும் அவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. அதனால், ராஜா அவர்களுடைய தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார்.ஒருநாள் இரண்டு பிரபல வைத்தியர்கள் வந்தனர். ஒருவர் பரம ஏழை; வைத்திய சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். மற்றொருவர் வைத்திய சாஸ்திரங்களில் ஒரு பக்கம் கூடப் புரட்டிப் பார்க்காதவர். ஆனால், அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உடனே சுகமடைந்தனர். இரண்டு வைத்தியர்களும் அரசரை நன்கு பரிசோதித்துப் பார்த்தனர். பரிசோதித்துப் பார்த்த பிறகு, வைத்திய சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர் 'அரசருக்கு ஒரு நோயும் இல்லை!' என்று சொன்னார். அப்போதே அவருடைய தலையை வெட்டிவிட உத்தரவு பிறப்பித்தார் அரசர்.மற்றொரு வைத்தியர், ''மகிழ்ச்சியோடு இருக்கும் ஒருவருடைய சட்டையை அரசர் தம் உடம்பில் போட்டுக் கொண்டு, ஒருநாள் இரவு தூங்கினால் போதும் நோய் குணமாகிவிடும்,'' என்றார்.அரண்மனை வேலையாட்கள் குதிரைகளில் ஏறிக் கொண்டு, மகிழ்ச்சியோடு இருக்கும் மனிதனைத் தேடி நாலா பக்கமும் சென்றனர். பணக்காரர்களாக மாட்டோமா என்று ஏங்கும் ஏழைகளையும், தங்களை ஏழைகளாக நினைத்துக் கொண்டு கவலைப்படும் பணக்காரர்களையும் பார்த்தனர்.மனைவி இறந்ததற்காக அழும் ஒருவனையும் பார்த்தனர். யாருமே மகிழ்ச்சியோடு இல்லை. கடைசியில் ஒரு கிராமத்தின் அருகில் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தனர். அவன் உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டு பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், புல் தரையில் புரண்டு கொண்டும் இருந்தான். அவன்தான் மகிழ்ச்சியோடு இருப்பவன் என்று தீர்மானித்த அரண்மனைச் சேவகர்கள், ''அய்யா! உன் சட்டையை ஒருநாள் இரவுக்கு நீ இரவல் கொடு. நாங்கள் நூறு ரூபாய் தருகிறோம்!'' என்றனர்.பிச்சைக்காரனோ, ''சட்டையா? என்னிடம் ஏது சட்டை?'' என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான். கடைசி வரையில் அவர்களால் மகிழ்ச்சியோடு இருக்கும் ஒருவனை பார்க்கவே முடியவில்லை. தேடிச் சென்ற அத்தனை பேரும் வெறுங்கையோடு திரும்பி வந்தனர்.அரசர் பார்த்தார்; உலகில் மனிதர்கள் எல்லாரும் ஒருவகையில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதைக் கவனித்தார். தான் மட்டும் அரண்மனையில் அடைந்து கொண்டு கிடப்பதையும், நோயாளி என்று நினைத்து அவஸ்தைப் படுவதையும் எண்ணி மனம் வெட்கினார்.எல்லா ஜன்னல்களையும் திறந்துவிட்டு உள்ளே சுத்தமான காற்று வீசும்படி செய்தார். வெளியே சென்று மக்களை சந்தித்தார். ஏழைகளுக்கு உதவினார். மக்கள் அவரை வாழ்த்தினர். நாட்டில் மகிழ்ச்சி பூத்தது. அரசரும் ஆரோக்கியமும் உற்சாகமும் அடைந்தார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !