உள்ளூர் செய்திகள்

திருடா... திருடா...

ஏழை உழவன் கருப்பன் வறுமை காரணமாக, மாடு ஒன்றை விற்க பக்கத்து ஊர் சந்தைக்கு, ஓட்டிச் சென்றான்.கால் நடையாக சென்றதால், களைப்பு மேலிட்டது. மர நிழலில் மாட்டைக் கட்டி, படுத்தவன், அயர்ந்து துாங்கி விட்டான்; திடீரென, விழிப்பு ஏற்பட்டது.மரத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டைக் காணவில்லை; யாரோ அவிழ்த்துச் சென்று விட்டனர். 'மாட்டை திருடியவன் நிச்சயம் சந்தைக்குத்தான் ஓட்டிச் சென்றிருக்க வேண்டும்' என்று நினைத்தவன், ஓட்டமும், நடையுமாக சந்தையைச் சென்றடைந்தான்.அங்கே, கருப்பனது மாட்டை விலை பேசிக் கொண்டிருந்தான் களவாடிச் சென்றவன்.ஓடிச் சென்று, அந்த திருடனை கையும், களவுமாகப் பிடித்தான்.''ஐயா... இந்த மாடு என்னுடையது; இவன் திருடி வந்து விட்டான்...'' என்றான்.''இல்லையில்லை... இது என் மாடு தான்; இவன் தான் பொய் சொல்கிறான்...'' என்றான் திருடன்.இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.முதியவர் ஒருவர் அங்கே வந்தார்; அவர்கள் வாதங்களை கூர்ந்துக் கேட்டார்.''நீ காலையில், உன் மாட்டிற்கு என்ன தீவனம் வைத்தாய்...''''எள்ளுப் பிண்ணாக்கும், அரிசிக் கஞ்சியும் ஏராளமா கொடுத்தேன்...'' என்றான், திருடன்.உழவனைப் பார்த்து, ''நீ உன் மாட்டிற்கு என்ன தீவனம் வைத்தாய்...'' என்றார், பெரியவர்.''ஐயா... நானோ மிகவும் ஏழை; சிறிது புல்லும், வைக்கோலுமே வைத்தேன்...'' என்றான்.பேதி மருந்தை வாங்கி வரச் சொல்லி, மாட்டிற்கு கொடுத்தார் பெரியவர்; சிறிது நேரத்தில், அந்த மாடு களிந்தது; அதில் புல்லும், வைக்கோலும் தெரிந்தன.எல்லாரிடமும் காட்டினார் முதியவர்.''முதலாமவனே திருடன்; இரண்டாமவன் மாட்டிற்குச் சொந்தக்காரன்; எனவே, அவனிடமே மாட்டைக் கொடுத்து விடுங்கள்...'' என்றார்.சுற்றிலும் நின்றவர்கள், திருடனுக்கு நன்கு அடி கொடுத்தனர்; திருடனும் ஒப்புக் கொண்டான்; அவனை, காவலர்களிடம் ஒப்படைத்தனர்.அந்த முதியவருக்கு நன்றி கூறி, கண் கலங்கினான் உழவன்.குட்டீஸ்... முதியவர்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கும்; எனவே, அவர்கள் புத்திசாலிகளாக இருப்பர்; நாம் அவர்களை மதித்து, நடந்தால் ஆபத்து நேரத்தில், சரியான அறிவுரைகள் கூறுவர்; இனி, நீங்களும், தாத்தா, பாட்டிக்கு மரியாதை கொடுப்பீர்கள் தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !