உள்ளூர் செய்திகள்

பலமான பலவீனம்!

கோவை மாவட்டம், காரமடை, போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1966ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, விளையாட்டு பயிற்சி ஆசிரியராக இருந்தார் சீதாராமன். கபடி விளையாட்டு குழு ஒன்றை அமைத்தார். நான் குள்ள உருவில், மிக பலவீனமாக இருப்பேன். இருப்பினும் அந்த குழுவில் சேர்த்துக்கொண்டார். எதிர் அணியில், இ.ரங்கசாமி மிகவும் பலசாலி; மூச்சை பிடித்து, 'சடு...குடு...' என பாடி, புயல் போல் பாய்ந்து ஆடுவான். அவன் அணியை, மூன்று மாதமாக வெல்ல இயலவில்லை. இதை கவனித்து என்னிடம், 'நீ முயற்சி செய்து அவனை வெல்ல வேண்டும்...' என கட்டளையிட்டார் ஆசிரியர்.என்னை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்வதில்லை. மைதானத்தில் கவனிப்பாரற்று நின்றிருந்த என்னை பொருட்படுத்தாமல், 'சடு...குடு...' என பாடியபடி, வேகமாக ஆடி அலட்சியமாக திரும்பியபோது அவனை பிடித்துக்கொண்டேன்; சக வீரர்களும் சேர்ந்து அமுக்கி தோற்கடித்தோம். என் உத்தியை பாராட்டினார் ஆசிரியர்.இப்போது எனக்கு, 73 வயதாகிறது; வாழ்வில் பலவீனமாக உணரும் தருணங்களில், இந்த சம்பவத்தை, டானிக்காக எண்ணி முன்னேறி வருகிறேன்.- எஸ்.மாரப்பன், திருப்பூர்.தொடர்புக்கு: 93630 15631


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !