வெயில் தந்த வெகுமதி!
நான், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, என் வகுப்பில் மொத்தம், 50 மாணவர்கள் உண்டு. ஒருநாள், 'ஒவ்வொருவரும், இரண்டு குயர் பைண்டிங் நோட்டு கொண்டு வர வேண்டும்' என கூறினார் ஆசிரியர். எங்கள் குடும்பத்தில் வசதி குறைவான நிலை. மேலும், பைண்டிங் நோட்டு என்றால், விலை அதிகம்.அதனால், என் அண்ணன், ஒரு குயர் வெள்ளை தாள் வாங்கி, ப்ரவுன் கலர் பேப்பர் அட்டை போட்டு, நோட்டு தைத்து கொடுத்தார். மறுநாள், அந்த நோட்டை பார்த்ததும், ஆசிரியருக்கு கோபம் வந்து, அந்த வகுப்பு முழுவதும் என்னை வகுப்புக்கு வெளியே, வெயிலில் நிற்க சொன்னார்.மறுநாள், தேர்வு வைத்தார். அதில் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். அதை கண்டதும் ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து, என்னை அருகில் அழைத்து பாராட்டி, தட்டி கொடுத்தார். வெயிலில் நிற்க வைத்த தன் தவறுக்கும் வருந்தினார். முதல் மதிப்பெண்ணுக்கான வெகுமதியும், பரிசும் கொடுத்தார்.பின்னாளில், நானே ஆசிரியராக பணியாற்றிய போது, ஏழை மாணவர்களிடம் இரக்கம் காட்டி நடத்தியதற்கு இதுவும் ஒரு காரணம்.- ஆர்.சுப்ரமணியன், சென்னை.