சுவாமி விவேகானந்தர்! (2)
மனவலிமையால் சாதனைகள் புரிந்து, உலகில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு தொடர்... தடுமாறாதே! சிறுவன் நரேந்திரனுக்கு அப்போது, 10 வயதாகியிருந்தது. நண்பர்களுடன், ஒரு நாடகக் குழுவை அமைத்தான்; பலவகை நாடகங்களை சிறப்பாக நடத்தி வந்தான்.சிறிது காலத்திற்குப் பின், நவகோபால் மித்ரா என்பவர் நடத்திய உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தான். கபடி, சிலம்பம், மல்யுத்தம், நீச்சல் பயிற்சி, படகு செலுத்துதல், கத்தி சண்டை போன்றவற்றை கற்றான். அவனது ஆர்வத்தை கண்டு, உடற்பயிற்சி நிலைய நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார், மித்ரா.ஒருவகை உடற்பயிற்சி வித்தியாசமானது; கூரையில், இரண்டு கயிறுகள் கட்டி, இடையில், கனமான மரக்கட்டையைத் தொங்க விட்டிருப்பர்; மரக்கட்டையைப் பிடித்து, உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு, 'ட்ரபீஸ்' என்று பெயர்.ஒரு நாள், அந்த மரக்கட்டையை, கூரையில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் நரேந்திரன். அதைக் காண, மக்கள் கூடி விட்டனர். கூட்டத்தில், ஆங்கிலேய மாலுமி ஒருவரும் இருந்தார். அவரை உதவிக்கு அழைத்தான் நரேந்திரன். அவருடன் இணைந்து கனமான மரக்கட்டையைக் கூரையில் பொருத்த முயற்சி செய்தான் நரேந்திரன்.ஒரு தருணத்தில், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்தது. ரத்தம் கசிந்தது; சுயநினைவு இழந்து சாய்ந்து விட்டார் மாலுமி. அதைப் பார்த்ததும், மாலுமி இறந்துவிட்டதாக எண்ணி வேகமாக கலைந்தது, கூட்டம்; நண்பர்களும் நழுவி விட்டனர். குழப்ப நிலையிலும், நரேந்திரன் மனம் தடுமாறவில்லை. அணிந்திருந்த வேட்டியைக் கிழித்து, மாலுமியின் காயத்தில் கட்டினான்; முகத்தில், சிறிது தண்ணீர் தெளித்து, மெல்ல காற்றை விசிறி தேவையான முதலுதவி செய்தான்.சிறிது நேரத்தில் சுயநினைவு பெற்றார் மாலுமி; அருகில் இருந்த பள்ளியில் படுக்க வைத்து, மருத்துவரை அழைத்து வந்து உரிய சிகிச்சை அளித்தான் நரேந்திரன். ஒரு வாரத்துக்கு பின், மாலுமி உடல் தேறியது. நன்றி தெரிவித்து புறப்பட்டார். நண்பர்களிடம் திரட்டிய பணத்தை மாலுமிக்கு தந்து உதவினான் நரேந்திரன். இந்த சிறுவன்தான், பின்னாளில் சுவாமி விவேகானந்தராக உலகம் போற்ற சாதனைகள் புரிந்தார்.'உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பியோட முயற்சி செய்யாதே... உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம்; இங்கு வலிமையைப் பெருக்கி கொள்ளவே வந்திருக்கிறோம்...' என, பின்னாளில் போதித்தார் விவேகானந்தர்.காரியம் யாவிலும் வெற்றி! நரேந்திரன், 11ம் வயதிலேயே, தலைமைப் பண்புகளை பெற்றிருந்தான்; எனவே, தன் வயதுள்ளவர்கள் மத்தியில் தலைவனாக விளங்கினான்.அன்று கோல்கட்டா துறைமுகத்துக்கு, 'சிராபிஸ்' என்ற போர்க்கப்பல் வந்தது. அதை ஆர்வமாகப் பார்த்தனர் மக்கள். நரேந்திரனும் பார்க்க விரும்பினான். விசாரித்த போது, 'ஆங்கிலேய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றால் தான் கப்பலை பார்க்க முடியும்' என தெரிய வந்தது.உரிய விண்ணப்ப படிவத்துடன், அதிகாரியைச் சந்திக்கச் சென்றான் நரேந்திரன். அந்த அலுவலகம், கட்டடத்தின் மாடியில் இருந்தது. அங்கிருந்த காவலர் அனுமதித்தால் தான், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும்.சிறுவன் என்பதால், மாடிப்படி ஏற அனுமதிக்கவில்லை காவலர்.'என்ன செய்வது' என்று யோசித்தான் நரேந்திரன். கட்டடத்தை சுற்றி வந்தான்.'சரி... வேறு வழி இருக்கிறதா பார்க்கலாம்' என, சிந்தித்தான். கட்டடத்தின் பின் பகுதியில் சிறியப் படிக்கட்டுகள் இருந்தன. அதன் வழியாக சென்று, அதிகாரியிடம் வேண்டுகோளைத் தெரிவித்தான். கப்பலை பார்க்க உரிய அனுமதி சீட்டு வழங்கினார்.வேலை நல்ல விதமாக முடிந்தது; பின், முன் படிக்கட்டு வழியாகத் திரும்பினான் நரேந்திரன். இதைக்கண்ட காவலர், 'எப்படி மாடிக்குச் சென்றாய்...' என ஆச்சரியத்துடன் வினவினார்.'நான் ஒரு மந்திரவாதி...'புன்சிரிப்புடன் பதிலளித்தான் நரேந்திரன்.'எல்லையற்ற வலிமையும் ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள் குடிகொண்டிருக்கின்றன. அதை உணர முடிந்தால் வெளியே கொண்டு வந்து முன்னேற முடியும்; நீயும், என்னைப் போல் ஆகலாம்...'இவ்வாறு பின்னாளில் போதித்தார் சுவாமி விவேகானந்தர். - தொடரும்...