உள்ளூர் செய்திகள்

கனிவான வார்த்தை

ஒருமுறை, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேசுவரத்திலும்; சாரதா தேவி, ஜெயராம் பாடியிலும் தனித்து வாழ்ந்தனர். இதை அறிந்த சில விஷமியர் வம்பு பேசியதை தாங்காது, கணவர் தங்கியிருந்த தட்சினேசுவரத்திற்குப் புறப்பட்டார் சாரதா தேவி.இன்றுபோல் அன்று வாகன வசதிகள் இல்லை; நடந்தே சென்றார். பகலும், இரவும் பாராது நடையை தொடர்ந்தார்.இருளுக்கு மேல் இருளைப் போர்த்தது போன்று ஒரே மையிருட்டு.தன்னந்தனியாக இளம் பெண்ணொருத்தி போகிறாள் என்றால், சும்மா விடுவார்களா கொள்ளையர்கள்.இரு கொள்ளையர்கள் சாரதா தேவியை பின் தொடர்ந்தனர்.நிலைமை விபரீதமாகும் நிலையில் மனதை சற்று திடப்படுத்தி, யோசித்தபடியே நடந்தார்.இந்த நிலையில், 'ஏய் பெண்ணே நில்லு!' என்று குரல் கொடுத்தனர்.அவர்களது பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது போன்று எவ்வித அச்சமுமின்றி நின்றார்.“எங்கே போகிறாய்?”“தட்சினேசுவரம் போகிறேன்!”“நீ மட்டுமா?”“இல்லை! என்னுடன் வந்தவர்கள் எல்லாம் சற்று முந்தி விட்டனர். அவர்களுடன் சேர்ந்து செல்லத்தான் வேகமாக போகிறேன். நல்ல நேரத்திற்கு நீங்களும் வந்து விட்டீர்கள். எனக்கு துணையாக, தெய்வம் தான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறது.“என் பெயர் சாரதா தேவி. உங்களது மருமகன் தட்சினேசுவரத்தில் இருக்கிறார். அவரிடம் உங்கள் மகளான என்னை, சேர்த்து விடுங்கள்” என்று அன்பு கனிந்த குரலில், சமயோசிதமாக கூறினார் சாரதா தேவி.கல்மனதினரையும் கரைக்கும் விதத்தில் சாரதா தேவியின் கனிவான வார்த்தைகள் இருந்ததால், கொள்ளையர்கள் ஒருவரையொருவர் பார்த்து, 'நண்பா! இதுவரை நம்மை திருடன்; அயோக்கியன்; கொள்ளைக்காரன்; முடுச்சவிக்கி பயல்கள் என்று தான் சொல்லி, மனசை நோகடிச்சிருக்காங்களே தவிர, இந்த பொண்ணு மாதிரி யாரும் பாசத்தோடு அழைக்கல. 'நம்மை பெத்த தகப்பன்களாக பாவிக்கும் இந்தப் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிட, தட்சினேசுவரம் சென்று, விட்டுவருவோம்' என்று சாரதா தேவிக்கு பாதுகாப்பாக சென்றனர்.பெண்களுக்கு எந்த காலத்திலும் பிரச்னைகள் இருக்க தான் செய்தது. அதை எப்படி கையாள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !