அந்த மாணிக்கம்!
பாண்டிய நாட்டில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மதிப்பு வாய்ந்த மாணிக்கம் ஒன்றை, விலைக்கு வாங்கினார். அதை, சின்னக்காம்பட்டி கிராமத்தில், வசித்த, தன் மகளுக்கு பரிசாகக் கொடுக்க விரும்பினார்.ஊர் முழுக்க, அந்த செல்வந்தர் பற்றியே பேச்சாகவே இருந்தது. 'மாணிக்க கல் வாங்கிய விலையில், ஒரு நாட்டையே வாங்கியிருக்கலாம்... செல்வந்தருக்கு பைத்தியம் பிடித்து விட்டது...' என்று, பேசினர் ஊர் மக்கள். செல்வந்தருக்கு, மாணிக்கத்தை, மகளிடம், பத்திரமாக சேர்ப்பது பற்றிய பயம் வந்தது. வீரத்திலும், அறிவிலும் சிறந்த நல்லசிவம் என்ற இளைஞனை, வரவழைத்து, 'இந்த மாணிக்கத்தை, என் மகளிடம், பத்திரமாக சேர்க்க வேண்டும்...' என்றார்.'ஐயா... கவலை வேண்டாம்; மாணிக்கத்தை, உங்கள் மகளிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுகிறேன்...' என்று கூறி புறப்பட்டான்.காட்டு வழியாக சென்ற போது, மூன்று திருடர்கள் அவரை வழி மறித்தனர்.'மாணிக்கத்தை கொடுத்து விடு...' என்று, மிரட்டினர்.'உங்களில், ஒருவரிடம் மாணிக்கத்தை தருகிறேன்; அவர் மட்டும் கோடீஸ்வரர் ஆகலாம்...' என்ற நல்லசிவம், மாணிக்கத்தை, திருடர்களில் ஒருவனிடம், கொடுத்தான். அதை வாங்கியதும், திருடன், ஓட ஆரம்பித்தான்; உடன் வந்த திருடர்கள், அவனை விரட்டி பிடித்தனர்.ஒரு திருடன், கத்தியால், அவனை குத்தி கொன்றான். அதன் பின், மாணிக்கத்திற்காக இரண்டு திருடர்களும், பலமாக மோதிக் கொண்டனர்; ஒருவன் களைத்து விழுந்தான். அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து, அவன் தலையில் போட்டு கொன்றான் மற்றொருவன். மிஞ்சியிருந்தது ஒரே திருடன். அவனும் களைப்புடன் இருந்தான். அவனைச் சண்டைக்கு இழுத்தான் நல்லசிவம்.'நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன்; என்னால், சண்டை போட முடியாது; உன் மாணிக்கத்தை நீயே வைத்துக் கொள்...' என்று கொடுத்து, ஓட்டம் பிடித்தான். மாணிக்கத்தை, பத்திரமாக செல்வந்தர் மகளிடம் கொடுத்து திரும்பிய நல்லசிவம், செல்வந்தரிடம், செய்தியை கூறினான். அவனை பாராட்டி, பல பரிசுகள் கொடுத்தார் செல்வந்தர்.சுட்டீஸ்...அறிவால் அனைவரையும் வெல்லலாம்!- நண்டுமாமா