உழைப்பின் அருமை
வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஆதியூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். அப்போது, கட்டணம் செலுத்திதான் படிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில், ஏழு பேர்; என் தந்தைக்கு, சொற்ப வருமானம். அதில்தான், குடும்பம் நடத்த வேண்டும்.எங்களுக்கு பள்ளி கட்டணம் கட்ட, அவர் படாதபாடு பட்டார். அங்கும், இங்கும் கடன் வாங்குவார். அவர் படும் துன்பம் கண்டு, பொறுப்புணர்ந்து படித்து, முன்னேறினோம்; எங்கள் வகுப்பு ஆசிரியை விஜயா என்பவரிடம் எங்கள் குடும்பநிலை குறித்து கவலை தெரிவித்தோம்.அவர் ஒரு யோசனை கூறினார்... அதாவது, எங்கள் ஊரிலிருந்த, சர்வோதய சங்கத்தில் பணியாற்றியவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அறிவுரைப்படி, ராட்டையில் நுால் நுாற்று, சர்வோதய சங்கத்தில் கொடுத்து பணம் பெறுவோம்.தீப்பெட்டி கம்பெனி அதிபர் ஒருவரிடம், என் அண்ணன்களை அறிமுகம் செய்தார். தீப்பெட்டி, தீக்குச்சி தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று, அதன்மூலம், பணம் ஈட்ட வழிகாட்டினார்.'பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் தான் இது போன்ற பணிகளை செய்ய வேண்டும்; எந்த விதத்திலும் படிப்பு பாதிக்கப்படக் கூடாது...' என, கண்டிப்புடன் கூறினார். நாங்கள் உற்சாகத்துடன் இந்த பணிகளில் ஈடுபட்டோம்; உழைப்பின் மகிழ்ச்சியை அடைந்ததோடு, பணமும் கணிசமாக சேர்ந்தது. பள்ளி கட்டணத்தை சிரமமின்றி செலுத்தினோம்; சீருடை வாங்கிக் கொண்டோம். எங்கள் தந்தையின் பாரம் குறைந்தது; உழைப்பின் அருமையை உணர்ந்தோம். இப்போது என் வயது, 58. எங்களுக்கு வழிகாட்டிய, ஆசிரியை விஜயாவுக்கு நன்றியையும், அன்பையும், மரியாதையையும் இப்போதும் செலுத்தி வருகிறோம்! - டி.கே.சுகுமார், கோவை.