உள்ளூர் செய்திகள்

காகமும் கிளியும்!

பங்களா முகப்பில் இருந்தது தங்கக் கூண்டு. அதில், அழகான கிளி அடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அழகு என்ற கர்வம் மிகுந்திருந்தது.கூண்டில், தினை, நெல், மிளகாய் பழம் என உணவுகள் இருந்தன; சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் நிரம்பியிருந்தது; அருகில் அழகிய ஊஞ்சலும் இருந்தது.அந்த பங்களா அருகில் வேப்பமரத்தில் கூடுகட்டிய காகம், குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதை எப்போதும் ஏளனமாக பார்த்தது கூண்டுக்குள் இருந்த கிளி.ஒரு நாள் -நிறத்தை கூறி கிண்டலாக அழைத்தது கிளி. திரும்பிய காகத்திடம், 'என்ன பிழைப்பு உன்னுடையது; உன்னை கண்டால் மக்கள் முகத்தை சுளிக்கின்றனர்; கல்லை விட்டு எறிகின்றனர். என்ன அருவெறுப்பான நிறம்; என்னைப் பார்... பச்சை நிறம், சிவந்த மூக்கு; எவ்வளவு அழகாக உள்ளேன்...' என, பெருமை பேசியது கிளி.பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தது காகம். பெருமை பேசுவதை நிறுத்தவில்லை கிளி.சரியான பாடம் புகட்ட நினைத்த காகம், 'நீ அழகுதான்; மக்கள் உன்னை நேசிக்கின்றனர் என்பதும் உண்மை தான்; அதனால் உனக்கு என்ன பயன்... நீ இருப்பது சிறை தானே; என்னைப் போல், சுதந்திரமாக பறக்க முடியுமா... எனக்கு, மக்கள் மரியாதை செய்கின்றனர்; உணவை, தினமும் எனக்கு வைத்த பின் தான் உண்கின்றனர்...'முன்னோர் சடங்கில் கூட, எனக்கு உணவு படைத்தபின் தான், பந்தியில் அமர்கின்றனர். நல்ல காற்று, பரந்த ஆகாயம் என, விருப்பம் போல் வாழ்கிறேன். உன் நிலையை பார்; உன் எஜமான் வைத்தால் தான் சாப்பாடு; அழகாக இருந்து, என்ன பயன்... நீ அடிமை... உன்னிடம் பேச நேரம் இல்லை...' என பறந்தது காகம்.திடீரென்று கூண்டருகே தாவியது பூனை. பயத்தில் நடுங்கிய கிளி, அடிமை என்பதை உணர்ந்தது.குழந்தைகளே... அனைவரையும் மதித்து நடக்க வேண்டும்.எல்.மகாதேவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !