உள்ளூர் செய்திகள்

வெள்ளை யானை! - சயாம் நாட்டுக் கதை

முன்னொரு காலத்தில் சயாம் நாட்டை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் உலகிலேயே காணப்படாத அபூர்வமான இனமான வெள்ளை யானை ஒன்றினை வைத்து வளர்த்து வந்தார். அவர் நல்லவராகவும், நேர்மையாளராகவும் இருந்ததால் மக்கள் அவரைப் போற்றினர்.அந்நாட்டில் கர்வம் மிகுந்த பணக்காரப் பிரபு ஒருவன் இருந்தான். அவனிடம் ஏகப்பட்ட பணம் இருந்த காரணத்தினால் மன்னரைப் பற்றி மிகவும் கேவலமாகவும், தாழ்வாகவும் பேசிக் கொண்டு திரிந்தான்.அந்த மன்னரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு புதிய மன்னரை நியமிக்கச் சூழ்ச்சிகள் பல செய்து வந்தான். இவ்விஷயம் மன்னரின் காதுகளுக்கும் எட்டியது.இவனிடம் தேவைக்கதிகமாகப் பணம் இருப்பதால் கர்வத்துடன் இப்படியெல்லாம் கண்டபடி நடந்து கொள்கிறான் என்று அவன் மேல் பரிதாபம் தான் கொண்டார் மன்னர். என்றாலும் அதை அப்படியே விட்டு விட்டாலும் அது தனக்கு இழுக்கு என்று எண்ணினார்.அவனுடைய இந்தத் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை ஒடுக்க அவர் ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டினார்.அவனிடம் நேருக்கு நேர் மோத அவர் விரும்பவில்லை. அப்படிச் செய்தால் குடிமக்களின் கவனம் தன் மேல் திரும்பும். தன்னுடைய பிரஜையே தன்னை இப்படிக் கீழ்த்தரமான நிலையில் பேசக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டு விட்டாரே மன்னர் என்று மக்கள் எண்ணுவர். எந்த நடவடிக்கை எடுத்தாலும் தனக்கு எதிரி என்பதால் இப்படித் திட்டம் போட்டுத் துன்புறுத்துகிறார் என்று நினைப்பர்.மன்னர் தாம் மன்னர் என்ற இறுமாப்பில் தன் குடிமக்களில் ஒருவனைத் துன்புறுத்துகிறார் என்று பேசுவர் என அஞ்சிய மன்னர் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.அந்த நாளும் வந்தது. மன்னரின் மகனுக்குப் பிறந்த நாள் விழா. மன்னர் உயர் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் அழைப்பு அனுப்பினார். அந்தக் கர்வம் கொண்ட பிரபுவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையிலே தானே அழைப்பை அனுப்பி வைக்க முடிவு செய்தார்.அரசர், தன்னுடைய பிரதிநிதியைத் தக்க படை பரிவாரங்களுடன் பிரபுவிடம் அனுப்பி வைத்தார். பிரதிநிதி, பிரபுவைச் சந்தித்தார். அரசரின் தகவல் அவரிடம் சொல்லப்பட்டது.''பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளத் தாங்கள் வரவேண்டும். நீங்கள்தான் எங்கள் விருந்தினர்களிலே தலைமை விருந்தினர். பிரதான விருந்தினர். தங்களைப் பற்றி மன்னருக்கு இது நாள் வரை சரியாகத் தெரியவில்லை.''தாங்களும் பெருந்தன்மையுடன் தங்களைப் பற்றித் தெரிவித்துக் கொள்ளவில்லை. தங்கள் அருமை, பெருமைகளை மன்னர் இப்போதுதான் கேள்விப்பட்டார். இதுவரை தெரியாததற்காக வருந்துவதாகக் கேட்டுக் கொள்ளச் சொன்னார்.''இந்த இனிய திருவிழாவில் தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னார். தங்களைத் தெரிந்து கொள்ளாததற்காக மன்னர் தங்களிடம் மன்னிப்புக் கேட்கக் கூடும்!'' என்றும் பிரதிநிதி கூறினார்.முதலில் மன்னரின் படை தன் வீடு தேடி வந்தவுடன் பயந்து போன பிரபு, பிரநிதிகளின் கருத்தைக் கேட்டவுடன் பெருமிதத்துடன், 'இத்தனை நாட்களுக்குப் பிறகாவது உங்கள் மன்னர் என்னைப் பற்றித் தெரிந்து கொண்டாரே! அதற்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்,'' என்று கூறிக் கர்வத்துடன் அவர்களுக்கு விடை கொடுத்து அப்பினான்.பூறந்த நாள் அன்று, எல்லாரும் கூடியிருக்கும் வேளையில் மன்னர் அந்தப் பிரபுவை மட்டும் தனியாக அக்கறையுடன் கவனித்தார். பின்னர் அந்தப் பிரபுதான் அன்றையத் தினம் சிறப்பு விருந்தாளி என்று அவையில் அறிவித்தார்.இதைக் கேட்ட எல்லாப் பிரபுக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் குணக் கேடான பிரபுவைப் பற்றி அவர்கள் நன்றாக அறிந்திருந்தனர்.மன்னனின் எதிரி, மன்னனைக் கவிழ்க்க எண்ணுபவன், அயோக்கியன், திமிர் பிடித்தவன், மன்னரைக் கீழாகப் பேசுபவன். இவையெல்லாம் தெரிந்திருந்தும் மன்னர் ஏன் இத்தனை அக்கறை கொண்டுள்ளார் அவன் மேல். குழப்பமடைந்தனர் எல்லாரும்.அவர்கள் கிசுகிசுப்பாக இப்படியெல்லாம் பேசிக் கொண்டனர்.'மன்னருக்கு அவனைப் பற்றித் தெரியும். அவனைச் சரிகட்டித் தன் பக்கம் இழுக்க எண்ணும் ராஜதந்திரம் இது''ஒரு வேளை, அவனுக்குப் பயந்து விட்டாரோ?''மன்னர் இப்படிக் கோழையாகலாமா?''பாவம் மன்னர்'ஆனால், அந்தக் கர்வம் பிடித்தவன், 'மன்னன் எனக்குப் பயந்து விட்டான். என் செல்வாக்கு அவனை ஊமையாக்கிவிட்டது' என்று எண்ணினான்.மன்னர் எதையும் கண்டு கொள்ளவில்லை. விருந்து அற்புதமாக இருந்தது. விடை பெற வேண்டிய வேளை நெருங்கியபோது மன்னர் கம்பீரமாகக் கூறினார்.''உங்களுக்கெல்லாம் என் நன்றி. நம் பிரதான விருந்தினருக்கு நாம் கவுரவத்தைத் தந்தாக வேண்டும். இந்தப் பிரபு தன் ஆயிரக் கணக்கான வேலைகளை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார். இவர் பாராட்டத் தக்கவர்.''இந்தச் சிறந்தவரின் நட்புக் கிடைத்தது குறித்து நான் மிகவும் மகிழ்கிறேன். எனவே, என் நினைவாக இவருக்கு ஓர் எளிமையான பரிசைத் தர எண்ணுகிறேன்!'' என்றதும் மற்ற பிரபுக்கள் திடுக்கிட்டனர்.''இந்த அயோக்கியனுக்கா?'' அதிர்ச்சியுடன் அவர்களில் ஒருவர் கூவினார்.உடனே மன்னர் சொன்னார்.''நான் மிகவும் ஆசையோடும், அற்புதமாகவும், பார்த்துப் பார்த்தும் வளர்க்கக் கூடியதான என் வெள்ளை யானையை இவருக்குப் பரிசாகத் தருகிறேன். மன்னரின் நண்பருக்கு ஏற்ற கவுரவமான பரிசு அது. இதை விட உலகில் வேறு எந்தப் பரிசையும் இத்தனை உயர்ந்ததாக மற்றவர்கள் தர முடியாது என்று எண்ணுகிறேன்.''மற்ற பிரபுக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். உலகில் உள்ள ஒரே ஒரு அபூர்வப் பொருள் அந்த வெள்ளை யானை. அதையா இந்த எத்தனுக்குத் தரப் போகிறார் மன்னர்?பிரபுவுக்கோ பேச நாவெழவே இல்லை.'இத்தனை உயர்ந்த பரிசு எனக்கா?' என்று அவன் காதுகளையே அவனால் நம்பவே முடியவில்லை.வெள்ளை யானை பிரபுவின் முன் நிறுத்தப்பட்டது. பிரபுவின் இதயம் மகிழ்ச்சியால் துடித்தது. அவன் வெள்ளை யானையுடன் தன் மாளிகை சென்றான்.மூத்த அமைச்சர் மன்னரிடம் கூறினார்.''அரசே, உங்கள் போக்கு ஒரு புதிர். அந்தப் பிரபு ஒரு ராஜத் துரோகி. அவனிடம் நீங்கள் காட்டிய பரிவு, பாசம், கொடுத்த பரிசு இதெல்லாம் புதுமை. அவனுக்கு முன் உண்மையான ராஜ விசுவாசிகள் அவமானப்பட்டு போனார்கள்!''மன்னர் புன்னகை புரிந்தார்.''அடுத்த பிறந்த நாள் விழா வரட்டும். அப்போது என் செயலின் உண்மையான பொருள் உங்களுக்கு விளங்கும்!'' என்றார் அமைதியாக.ஓராண்டு உருண்டோடியது-அடுத்த பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் ஆரம்பமாயிற்று. எல்லாரும் வந்திருந்தனர். ஆனால், கர்வம் பிடித்த பிரபுவை மட்டும் காணவில்லை.'அந்த அகம்பாவம் கொண்டவனுக்கு இந்த ஆண்டு அழைப்பு அனுப்பவில்லை போலும்!''அவனுடைய தற்போதைய நிலையில் அழைத்தால் மட்டும் வரவா போகிறான்?'மற்ற பிரபுக்கள் கிசுகிசுத்துக் கொண்டனர். 'இந்த ஆண்டுக்குரிய பிரதான விருந்தாளி இன்னும் வரவில்லையே!' ஒரு பிரபு நக்கலாக இன்னொருவரிடம் கேட்டார்.அரசர் சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டார்.''வெள்ளை யானையைப் பரிசு பெற்ற பிரபுவைத்தானே தேடுகிறீர்கள். வந்து விடுவார். தனிப்பட்ட அழைப்பு அவருக்கு அனுப்பப்பட்டு விட்டது!''அப்போது ஒல்லியான உருவமும், கந்தலான ஆடைகளும் அணிந்த ஒருவன் திடீரென்று திடுதிடுவென்று ஓடி வந்து மன்னரின் கால்களைப் பிடித்துக் கொண்டான்.''என்னைக் காப்பாற்றுங்கள் அரசே!''மன்னர் அவனைப் பார்த்தார். பின் திடுக்கிட்டவர் போல எழுந்து, ''பிரபு என்ன இது கோலம்! சென்ற ஆண்டு தாங்கள் இருந்த கம்பீரம் எங்கே? இப்போதைய பரிதாப நிலை எங்கே?''நீங்கள் என் காலில் விழலாமா? நானல்லவா என் எதிரி மன்னரின் காலில் விழ வேண்டும். அப்போது தானே உங்கள் மனம் மகிழும்!''''அரசே! என்னை மன்னித்து விடுங்கள்!'' அவன் கதறி அழுதான்.''இந்த ஆண்டும் நீங்களே பிரதான விருந்தினர். உங்களை கவுரவிக்கத் தானே இன்னொரு வெள்ளை யானையை அரும்பாடுபட்டுத் தேடிக் கொண்டு வந்திருக்கிறேன். அதை இந்த ஆண்டும் நீங்களே ஏற்க வேண்டும்!''''அரசே! இப்படிச் சொல்வதற்குப் பதில் என்னைக் கொன்று விடுங்கள். அதுவே சிறந்த தண்டனை. பிரபுவாக இருந்த என்னை ஒரே ஆண்டில் ஒரே ஒரு வெள்ளை யானை பிச்சைக்காரனாக்கி விட்டது. வெள்ளை யானையைத் தெய்வத்துக்குச் சமமாக மக்கள் மதிக்கின்றனர். அதற்கு எது நேர்ந்தாலும் மக்கள் என்னை உயிரோடு விட மாட்டார்கள்.''எனக்கு அந்த யானை வேண்டாம். தங்களின் மகனின் பிறந்தாள் பரிசாக அதை நீங்களே ஏற்க வேண்டும்!''''கொடுத்ததை மன்னன் திரும்பப் பெறக் கூடாது பிரபு!''''இனி என்னால் தாங்க முடியாது. நான் திருந்தி விட்டேன். உங்கள் பரிசுப் பொருள் என் காணிக்கைப் பொருளாக இருக்கட்டும். எனக்கு உங்களிடம் ஏதாவது ஒரு சின்ன உத்தியோகம் கொடுங்கள். பிழைத்துக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்!''அவன் கோவென்று அழுதான். அப்போதுதான் மன்னரின் திட்டம் மற்றவர்களுக்குப் புரிந்தது. மன்னர் அவனைப் பெருந்தன்மையுடன் மன்னித்தார். அவன் கவுரவத்திற்கு ஏற்றபடி அரசாங்க உத்தியோகம் ஒன்றை தந்தார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !