திக்... திக்... பங்களா! (8)
சென்றவாரம்: பழைய குற்றாலம், கொள்ளு தாத்தா மாளிகைக்கு வந்த மதுவும், வினுவும் பொதிகை மலைக்கு சென்றனர். அவர்களை மந்திரக் கிழவி விரட்டினாள். இனி -பங்களாவை நெருங்கியதும், 'அப்பாடா... தப்பிச்சோம்...' என்றபடி பெருமூச்சு விட்டான் வினு.சுப்பையன் பக்கம் திரும்பி, 'மந்திர கிழவியை நீ பார்த்திருப்ப இல்ல...' என்றாள் மது.'ஆமா...''கொள்ளு தாத்தாவுக்கு அவளை தெரியுமா...''தெரியும். தாத்தா வழியில அவ குறுக்கிட்டமாட்டா; அவ வழில தாத்தா குறுக்கிட மாட்டார்...'உதட்டை பிதுக்கினான் சுப்பையன்.'ஜெய்சீலிமா நல்லவளா, கெட்டவளா...''அவளிடம் சாபம் வாங்கிய பலர், குற்றாலம் காட்டுல கோழி, குரங்குகளா திரியறதை பார்த்திருக்கேன்...''அவங்க மனித உருவத்துக்கு திரும்ப மாட்டாங்களா...''யாருக்கு தெரியும்...''மலை மேல நடந்ததை தாத்தாகிட்ட சொல்லணுமா...''வேண்டாம்... சொன்னா திட்டுவாரு...'நடு உதட்டில் விரலால் தட்டியவாறே ஆமோதித்த வினு, 'ஆமாம் மது; சொல்ல வேணாம்; சுப்பையனுக்கு மட்டுமா... நமக்கும் சேர்த்துத்தான் திட்டு கிடைக்கும்...' என்றான்.போர்டிகோவுக்கு வந்தனர்.'நீங்கள் சாப்பிட போங்க...' என்று அகன்றான் சுப்பையன்.பங்களாவுக்குள் பிரவேசித்ததுமே, இரவு பகல் குழப்பம் பூத்தது. திசை மயக்கம் வந்தது.உணவு மேஜையில் தாத்தாவும், பாட்டியும் காத்திருந்தனர். அவர்கள், 100 வயது நிரம்ப போகும் தம்பதியாக தெரியவில்லை; அநியாயத்துக்கு இளமை.மேஜையில் பழங்கள் குவிந்திருந்தன. சமையற்கட்டிலிருந்து அபரிமிதமாக எழுந்தது வாசனை; முடுக்கிவிட்டது போல வந்தாள் செண்பா. அவளை நோக்கியவாறு, 'இவ கண் இமைக்கிறதே இல்லையே... ஏன் தாத்தா...' என்றான் வினு.'அவளுக்கு ஏதோ வியாதி...''வைத்தியம் ஏதும் இல்லயா...''இல்லன்னு தான் நினைக்கிறேன்...' என்றார் தாத்தா.இட்லிகளையும், அயிரை மீன் குழம்பையும் பரிமாறினாள் செண்பா. சாப்பிட்டு முடித்ததும், 'சில கேள்விகள் மனசுல துருத்திக்கிட்டு இருக்கு தாத்தா...' என்றாள்.'கேளேன்...''உங்களுக்கும், பாட்டிக்கும் என்ன வயசாகுது...''எனக்கு, 98; பாட்டிக்கு, 95...' என சிரித்தார்; பற்கள் வெண்மையாய் பளீச்சிட்டன.'உங்க இளமையின் ரகசியம் என்ன தாத்தா...''ஆயிரம் இருக்கு... உணவுப் பழக்க வழக்கம், பாரம்பரியம், சித்த மருத்துவம், அளவான துாக்கம், முதுமையை தாமதப்படுத்த சில வழிமுறைகள்...''அதென்ன வழிமுறைகள்...''மனித உடம்பில், உயிர் கடிகாரம் இருக்கு. அதுதான், 15 வயசுல மீசை முளைக்க வைக்குது. 40 வயசுல நரை விழ வைக்குது. உயிர் கடிகாரத்தை மிக மெதுவா செயல்பட வைக்கணும். அப்படி வெச்சா சாதாரணமா, 300 வருஷம் உயிர் வாழலாம். சுவாசத்தைக் கட்டுப்படுத்தினாலும் இளமையை தக்க வைக்கலாம்...'சுண்டெலியையும், ஆமைக் குட்டியையும் எடுத்து வந்து உணவு புகட்டினாள் மது.'இரண்டுமே உங்க செல்லப்பிராணிகளா...''ஆமா தாத்தா...''ஏன் குளிக்க எடுத்துட்டுப்போகல...''இந்த இடம் பழகட்டும்...' என்று ஆமைக்கு முத்தம் கொடுத்தாள் மது.'தாத்தா... பாட்டி... உங்க உயிர் கடிகாரங்களை மெதுவா செயல்பட வெச்சிருக்கீங்களா...' என்றான் வினு.புன்னகைத்தார்.'எத்தனை வயசு வரைக்கும் உயிரோட இருப்பீங்க...''யாரு கண்டா... 400 வருஷம் கூட இருப்போம்...''எங்க பெற்றோர் உயிர் கடிகாரங்களையும் மெதுவா செயல்பட செய்ங்க தாத்தா...'மத்திமமாய் தலையாட்டி, 'இன்னைக்கு எந்த இடத்தை பார்க்க விரும்புறீங்க...' என்றார்.'இந்த மாளிகையை சுத்திப் பார்க்க விரும்புறோம் தாத்தா...''அப்படி என்ன இந்த பங்களால இருக்கு...' என்று மிரட்சியுடன் கேட்டார் தாத்தா.'இருக்கே... இந்த மாளிகையில சரியா, 100 அறைகள் இருக்கு. 100 வாசல்களும் இருக்கு; அறை சுவர்கள்ல புராதன ஓவியங்கள் தொங்குது. மாளிகைக்கு வெளியே இருக்கும் வெப்பமும், வெளிச்சமும் உள்ளே இல்லை. மொத்தத்துல அணு அணுவா ரசிச்சுப் பார்க்க விரும்புறோம்...'தாத்தாவின் தோளை தடவி, சமாதானப் படுத்தி, 'மாளிகையை சுற்றித்தான் பார்க்கட்டுமே...' என்றாள் பாட்டி.'அந்த, 99வது அறை...''அதை மட்டும் பார்க்க கூடாது...' என்று சாவிக்கொத்தை கொடுத்தார் தாத்தா.ஓடிச்சென்று சாவிக்கொத்தை கையில் எடுத்தான் வினு; கனத்தது. அறைகளை திறக்க ஆரம்பித்தனர். ஒரு அறையில், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.ஒரு அறையில் ஒலைச் சுவடிகள். இன்னொரு அறையில் ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள். நெல் பத்தாயம்; வெள்ளி தங்க நகைகள், வித்தியாசமான வண்ணங்களில் பொம்மைகள், மார்புக் கவசங்கள், முகமூடிகள், வாள், அரிவாள்கள், கோடலிகள், வில் அம்புகள், நாட்டுத் துப்பாக்கிகள்.ஒரு அறையில், 20க்கும் மேற்பட்ட மேஜைகளில் போன்சாய் மரங்கள்; ஒரு அறை முழுக்க பித்தளை, செம்பு பாத்திரங்கள்.சில அறைகளில் ஆடம்பர படுக்கைகள்; தரையில் சகதி உபயத்தால் ஏற்பட்ட காலடித் தடங்கள். நான்கு மணி நேரத்தில், 98 அறைகளை பார்த்தனர். 99வது அறைக்கு சாவி இல்லை. 100வது செண்பா வாசம் செய்யும் சமையலறை.அந்த, 99வது அறையை உன்னித்தனர்; மிகப்பெரிய பூட்டு தொங்கியது.'மது... வா போவோம்...' என்றான் வினு.'அந்த அறையும் பாத்துட்டு போவோமே...' என்றாள் மது.'வேணாம்... வீண் வம்பு...''ஒண்ணும் வம்பு வராது... சாவித்துவாரம் வழியே பார்ப்போம்...' என்றாள் மது.'சரி வா...'இருவரும் அந்த அறை வாசலுக்கு நடந்தனர். வராண்டாவை ஆராய்ந்தனர்; யாருமில்லை.'மது மொதல்ல நீ போய் சாவி துவாரத்துல பாரு... நீ திரும்புற வரைக்கும் மாடிப்படிய கண்காணிக்கிறேன்...'சாவி துவாரத்தில் ஒற்றைக் கண்ணை பதித்தாள் மது. கண்ணை இடமும், வலமும் ஒட்டினான். ஒன்றும் தெரியவில்லை. 'உள்ளே என்னடி பாத்த...''ஆயிரம் பேய்க தலைவிரிச்சு ஆடுது. வந்துபாரு... பிடிச்சிருந்தா நீயும் சேர்ந்து ஆடு...'அலுத்து சலித்துக் கொண்டாள். அசுவாரசியமாக சாவி துவாரத்தில் கண் பதித்தான் வினு; காலி அறை.'என்னடா தெரியுது...''என்னன்னமோ தெரியுது...''அங்க ஒண்ணும் இல்ல...'சாவி துவாரத்திலிருந்து கண்களை விலக்கிய போது, அந்த காட்சியை கண்டான் வினு.உடம்பெல்லாம் சகதி பூசிய பூதம், தள்ளாடியபடி, சாவி துவாரம் நோக்கி வந்தது.உட்பக்க சாவி துவாரத்தில் ஒற்றைக் கண் பதித்தது; ரத்த குழகுழப்பான இமை இல்லாத வட்ட கண். சகதி பூதம், 'யாருடா நீ... என் அறைக்குள் திருட்டுத்தனமாய் பார்க்கிற... கண்ணை நோண்டிடுவேன்...' என்றது.வினு சாவி துவாரத்திலிருந்து கண்ணை எடுக்க, சகதி பூதத்தின் நகம் நீண்ட பச்சை பாசி படர்ந்த விரல்கள், சாவி துவாரம் வழி நீண்டு மிரட்டின!இருவரும் விக்கித்து நின்றனர்.- தொடரும்...