டாய்லட் அம்மா...
கடந்த, 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., முடித்து விட்டு, கல்லூரியில் சேர, நானும் என் தோழியும் விண்ணப்பித்திருந்தோம். நேர்முக காணலுக்கு அழைத்திருந்தனர்.தேர்வு நேரத்தில், எனக்கு படபடப்பும், வயிறு கலங்குதல், உடம்பு சூடு ஆகும். சிறு வயதிலிருந்தே இந்த குறை உண்டு. பரீட்சைக்கு செல்லும் முன், இரண்டு முறையாவது, கழிப்பறை சென்று விடுவேன்.அந்த கல்லூரியை பற்றி என் தோழி சொல்லியபடி வந்தாள். நேர்காணலில் என் கேட்பரோ என்பது பற்றி, மிகவும் பயம் ஏற்பட்டு, என் வயிறு கலக்கிவிட்டது.தோழியிடன் இது பற்றி கூறினேன். அவள், 'கல்லூரி போன பின் பாத்துக்கலாம்; அது வரைக்கும் சமாளி' என்று கூறி கொண்டே வந்தாள். ஆனால், என்னால், நடக்க கூட முடியவில்லை; கை, கால் நடுக்கம் ஏற்பட்டது. உடனே என் தந்தையிடம் கூறினேன்.அவர் பதட்டப் படாமல், அருகில் இருந்த வீட்டை காட்டி, உதவி கேள் என்றார். நான் மிகவும் தயங்கினேன்.பின், அவரே, அவர்களிடம் பேசினார். என்னை உள்ளே போகும்படி கூறினார். பின், நன்றி கூறி விட்டு கிளம்பினோம்.கல்லூரி சென்று நேர்காணலில் வெற்றி பெற்று ஊர் திரும்பினோம்.வரும் வழியில், 'ஊரையும், வீட்டையும் பிரிந்து வேறு இடத்திற்கு படிக்க வரும் நீ, தேவையில்லா பயம், தயக்கம் எல்லாவற்றையும் விட வேண்டும்; பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று யோசி; உன்னால் முடியும்' என்று நல்ல விதமாக, அப்பா அறிவுரை கூறினார்.அதன் பின் என் தோழி, 'உன் அப்பா எவ்வளவோ மேல்; நல்லவர். என் அப்பாவாக இருந்திருந்தால், 'எருமை வயசாச்சு, வந்த இடத்தில் என்ன எழவு' என்று வசை பாடியிருப்பார்' என்றாள்.என் மனதில், அப்பாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இன்று, வெற்றிகரமான இல்லத்தரசியாக இருக்கிறேன். இன்று அப்பா இல்லையென்றாலும், அவர் சொன்ன அறிவுரையை, என் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திக்கும் சொல்லி வளர்க்கிறேன்.இப்போதும் என் தோழி, நேரில் பாக்கும் போது, 'டாய்லட் அம்மா எப்படி இருக்கீங்க' என்பாள்.- ச.கீதா, மடிப்பாக்கம்