உள்ளூர் செய்திகள்

சகிப்பு!

அவன் ஓர் அரசன். அரச போகங்கள் அவனுக்கு அலுத்துவிட்டன. அதனால், ஒரு நல்ல குருவிடம் உபதேசம் பெற்று ஞானம் பெற அவன் விரும்பினான். ஜென் குரு ஒருவர் இருப்பதை அறிந்து அவரை நாடிச் சென்றான். அவரிடம் தன் மன விருப்பத்தை வெளியிட்டான்.ஜென் குரு சிரித்தார்.''ஞானம் கிடக்கட்டும். முதலில் ஞானம் பெற உன்னைத் தகுதியாக்கிக் கொள்!'' என்றார்.மன்னனுக்கு விளங்கவில்லை.''பயிர்களை ஒரு நிலத்தில் விதைக்க வேண்டுமென்றால் அந்த நிலம் முதலில் <<உழுது பண்படுத்தப்பட வேண்டும். அதுபோல முதலில் உன் மனத்தை நீ பக்குவப்படுத்து!'' என்றார் அந்த குரு.அவர் சொன்ன தத்துவம் நன்றாகத்தான் இருந்தது. என்றாலும் அதன் பொருள் விளங்கவில்லை மன்னனுக்கு. அவர்கள் பேசிக்கொண்டே வந்தபோது, சீடன் ஒருவன் துடைப்பத்தால் அந்த இடத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தான். அதனால் புழுதி பறந்தது. காற்றில் தூசு, துரும்புகள் பறந்து வந்து மன்னனின் அழகிய ஆடைகள் மீது படிந்தன.மன்னன் கடும் கோபத்துடனும், எரிச்சலுடனும் குருவிடம் சுட்டிக் காட்டினான். மிகுந்த மன உளைச்சலுடன் சீடன் மீது குற்றச்சாட்டுக் கூறினான்.குரு சிரித்தப்படியே, ''உன்னிடத்தில் பாம்புகள் நிறைய இருக்கின்றன. போய் அதை அப்புறப்படுத்து!'' என்றார்.மன்னன் சிந்தனையுடன் போய்விட்டான். ஓராண்டுக்குப் பின் இரண்டாம் முறையாக அங்கு வந்தபோது, அதே சீடன் பெருக்கிக் கொண்டு இருந்தான். அப்போது வீசிய காற்றில் அவன் பெருக்கியதால் ஏற்பட்ட புழுதி அவன் மேல் வாரியடித்தது. இம்முறை மன்னர் குருவிடம் குறை கூறவில்லை. நேராக அந்தச் சீடனிடமே சென்று, ''கடுமையான குளிரில் கண் தெரியவில்லையா? ஆட்கள் வரும்போது பார்த்துப் பெருக்கு!'' என்றான்.இம்முறை குரு, ''உன்னிடம் நாய் இருக்கிறது, போய் அதனை விரட்டு!'' என்றார்.மூன்றாம் முறை மன்னன் வந்தபோது, சீடன் ஒரு வாளியில் கரைசலுடன் வந்து மோதியதில் மன்னனின் உடைகள் மீது தெறித்தது கரைசல். இப்போது மன்னன் கோபிக்கவேயில்லை. அந்த சீடனிடம், 'நன்றி' என்றான்.இம்முறை, குருவே ஓடி வந்து மன்னனை எதிர்க்கொண்டு, ''ஞானம் பெற முழுத் தகுதியானவன் நீ. இனி மேல் உனக்குச் சொல்லிக் கொடுக்க இனி என்னிடம் என்ன இருக்கிறது?'' என்றார் பெருமிதத்துடன்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !