உள்ளூர் செய்திகள்

டாப் 5 பழங்கள்!

உலகளவில் உணவில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்களின் சுவை, ஊட்டச்சத்து, எளிதில் கிடைக்கும் தன்மை ஆகியவை, மக்களை ஈர்க்கின்றன. அவற்றில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள பழ வகைகளை பார்க்கலாம்... வாழைப்பழம்: தென்கிழக்கு ஆசியாவில், 5000 ஆண்டுகளுக்கு முன் உருவானது வாழை; பெர்ரி வகையைச் சேர்ந்தது. இந்தியா மற்றும் சீனாவில் பயிரிடப்பட்டு, வர்த்தகம் மூலம் 15ம் நூற்றாண்டில் உலகெங்கும் பரவியது. பொட்டாசியம், வைட்டமின் சி,பி6 நிறைந்த வாழைப்பழம், உடலுக்கு ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உலகளவில் ஆண்டுக்கு 15 கோடி டன் வாழைப்பழம் உற்பத்தியாகிறது. எளிதில் கிடைப்பதாலும், குறைந்த விலையும், இனிப்பு சுவையும் வாழைப்பழத்திற்கு முதலிடம் பெற்று தந்துள்ளது. ஆப்பிள்: உலக மக்களால் அதிகம் விரும்பப்படும் பழங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஆப்பிள். மத்திய ஆசியாவில் ஆப்பிள் மரங்கள் தோன்றின. பழமாகவோ, பழரசமாகவோ ஆப்பிள் பழங்கள் உட்கொள்ளப்படுகின்றன. ஜாம் உள்ளிட்ட இனிப்பு வகைகளிலும் பயன்படுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள், செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. மாம்பழம்: பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மாம்பழம். இந்தியாவில் தோன்றிய இது, காயாகவும், பழமாகவும், பழச்சாறாகவும் பயன்படுகிறது. பல்வேறு வகை இனிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்தது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு: உலகம் முழுவதும் விரும்பப்படும் பழ வகைகளில், நான்காவது இடத்தில் ஆரஞ்சு உள்ளது. தென் சீனா, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரில் தோன்றியது. இதை சாறாகவோ, பழமாகவோ உட்கொள்கின்றனர். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நோய் எதிர்ப்புக்கு உதவுகிறது; தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. திராட்சை: பெரிதும் விரும்பப்படும் பழங்களில் ஐந்தாவது இடத்தில், திராட்சை உள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் தோன்றியது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது, இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பழமாகவும், உலர்ந்த திராட்சையாகவும், பழரசமாகவும் பயன்படுகிறது. ஒயின் தயாரிக்கவும் திராட்சை பழங்கள் பயன்படுகின்றன. மக்களின் விருப்பத்தில் வாழைப்பழம் முதலிடத்தில் இருந்தாலும், ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை ஆகியவை, அடுத்தடுத்த ஐந்து இடங்களை பெற்றுள்ளன. - நர்மதா விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !