உள்ளூர் செய்திகள்

அரிகோ (9)

அரிகோ பயன்படுத்தும் கத்தி மற்றும் கத்திரிகள் கொதிக்கும் நீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்யப்படாத நிலையில் இருந்த போதிலும், அவை புண்ணாக்கி, சீழ் பிடிக்காமல் இருப்பது பெரும் அதிசயம் என்றும் தெரிவித்திருந்தார்.எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும், மிகப் பெரிய அனுபவசாலியாக இருந்தாலும், அவர்களால் செய்ய முடியாத அளவில் நம்பவே முடியாத திறமையுடன் அறுவை சிகிச்சை செய்யும் அரிகோவின் செயல்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் காண்பது என்பது முடியாத ஒன்றாகவே உள்ளது என்றும், தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் டாக்டர் ராபர்ட் லாயிட்லா.இவை அனைத்தும் அரிகோவின் புகழை உச்சிக்கு எடுத்துச் சென்றாலும், அவரைப் பற்றிய மர்மங்கள் மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதே உண்மை.அரிகோவின் ஆதரவாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குபிட்ஷேக், பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் போய் தங்கியிருந்தார்.இந்நிலையில் அடுத்த தேர்தல் நடைபெற இருந்த காரணத்தினாலோ என்னவோ மீண்டும் அவர் சொந்த நாடான பிரேசிலுக்குத் திரும்பி யிருந்தார்.உடனடியாக அரிகோவைச் சந்திப்பதற்காக காங்கோனாய் வந்த குபிட்ஷேக், அங்கு வெகு நேரம் அரிகோ உடன் பேசிக் கொண்டிருந்தார்.இரவு தங்கியிருந்து அரிகோவுடன் நிறைய விவாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தாலும், இதனால் அரிகோவின் மருத்துவப் பணிக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக இரவு வந்ததும் அவரிடம் விடைபெற விரும்பினார்.ஆனால், குபிட்ஷேக்கிற்கு உடனடியாக விடை கொடுக்காமல் இருந்தார் அரிகோ. அப்போது அவரது முகத்தில் இனம்புரியாத கவலையும், சோகமும் அப்பிக் கிடந்ததைக் கண்ணுற்றார் முன்னாள் அதிபர்.'ஏன், என்னாயிற்று அரிகோ? தங்கள் முகத்தில் ஏதோ கலவரத்தைப் பார்க்கிறேனே...'' பதற்றத்துடன் கேட்டார்.உடனடியாக அதற்குப் பதிலளிக்காமல் சிறிது நேரம் அமைதியாகவே இருந்தார் அரிகோ. ஆனால், அந்த அமைதியில் ஏதோ ஒரு தயக்கம் தெரிந்தது.பின்னர் தயக்கத்தைக் கட்டுப்படுத்தியவாறு, 'மிக விரைவில் எனக்கு மரணம் ஏற்படப் போகிறது. விபத்து ஒன்றில் பலமாக அடிபட்டு சாகப்போகிறேன்,'' என்றார்.இதைக்கேட்ட குபிட்ஷேக் பூமியின் சுழற்சியே ஒரு கணம் அசையால் நின்றுவிட்டதைப் போலக் காணப்பட்டார். 'என்ன சொல்கிறீர்கள் அரிகோ?'' என்று பதற்றத்துடன் கேட்டார்.'உண்மைதான். விரைவில் அகால மரணம் என்னை அபகரித்துக் கொள்ளப் போகிறது. இதுதான் நமது கடைசி சந்திப்பு. எனவே தான், நான் உங்களுக்கு சோகமாக விடை தருகிறேன்,'' என்றார் அரிகோ.'ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? தாங்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பதாக நினைக்கிறேன். சற்று அமைதியாக ஓய்வெடுங்கள். எல்லாம் சரியாகப் போகும்,'' என்றார் குபிட்ஷேக்.அப்போது அரிகோ தனக்கு அடிக்கடி வரும் கனவு ஒன்றைப் பற்றி விவரித்தார்.'கருப்பு சிலுவை ஒன்று அடிக்கடி என் கனவில் வந்து கொண்டே இருக்கிறது. அது ஏதாவது துர் சம்பவம் நிகழப் போவதற்கு முன்பாக வந்து எனக்குத் தகவல் சொல்வது வழக்கம். இப்போதும் அப்படியே வருகிறது. நண்பர் ஒருவர் என் காரை இரவல் வாங்கிக் கொண்டு போனார். அந்த கார் ஒரு கிடுகிடு பள்ளத்தில் தலை கீழாய் உருண்டு பெரும் விபத்திற்குள்ளானது. ஆனால், அதை ஓட்டிச் சென்ற நண்பர் காயமே இல்லாமல் தப்பித்து விட்டார்'' என்றார் அரிகோ.'இதற்கும், உங்கள் அகால மரணத்திற்கும் என்ன சம்பந்தம்?'''இது ஒரு கெட்ட சகுணம். என் முடிவைத்தான் அது இவ்வாறு அறிவுறுத்துகிறது. இதில் சந்தேகம் இல்லை,'' என்று பிடிவாதமாகக் கூறினார் அரிகோ.அவரது இந்தச் தீர்க்க தரிசனம் உண்மையாக அமைந்து போனதுதான் ஆச்சரியம்.1071ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி. வழக்கம்போல, காலையில் அவரது மருத்துவ மனையில் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.அவருக்காக அங்கு ஒரு மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டிருந்தது. அவரது நலன்விரும்பிகள் சிலர் நாடெங்கும் நன்கொடை திரட்டி இதனைக் கட்டியிருந்தனர்.'இன்று மாலை மூன்று மணிக்கு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனால் காலையிலேயே அத்தனை பேருக்கும் சிகிச்சை அளித்துவிட்டு, பக்கத்து ஊரான லபாய்டேக்குச் சென்று புதிய கார் ஒன்றை வாங்கி வரப் போகிறேன்,'' என்று நெருங்கிய சகாக்களிடம் கூறினார்.அப்படியே வேகமாகத் தனது கடமைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு மதிய உணவருத்தச் சென்றார்.அன்று திடீரென்று மழை பெய்தது. அதுவும் பலத்த மழை. நண்பகலுக்குப் பிறகே மழை ஓய்ந்தது. அப்புறம் தனது மனைவி அர்லடேவிடம் விடைபெற்றுக் கொண்டார். அவரது இருபது வயதான அன்பு மகன் ரிபெரியோவின் உச்சந் தலையைப் பாசத்துடன் முத்தமிட்டு விட்டு, தனது ஓபல் காரில் நண்பனுடன் லபாய்டே நோக்கிப் பயணித்தார்.ஊருக்கு வெளிப்புறமாக இருந்த பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டார். அப்போது மீண்டும் மழை பிடித்துக் கொண்டது.பி.ஆர்.135 தேசிய நெடுஞ்சாலையில் வண்டியைச் செலுத்த ஆரம்பித்தார். சுமார் 3 கி.மீ., தொலைவைக் கடந்த போது ஒரு மறைவான அபாய திருப்பம். வழக்கமாக அரிகோ கவனமாகவும், மெதுவாகவும் காரை ஓட்டுவது வழக்கம். ஆனால், இன்று அதனைத் தவற விட்டிருந்தார்.அதற்கு காரணமும் இருந்தது.மாலை மூன்று மணிக்குள் புதிய காரை வாங்கி விட்டு திரும்ப வேண்டும். புதிய மருத்துவமனை திறப்பு விழா இருக்கிறது மட்டுமல்லாமல், நிறைய நோயாளிகள் வேறு காத்திருப்பார்கள் என்ற நினைப்பு உள்ளுக்குள் ஓடியது.ஆக, வேகமாகச் சென்ற கார் அந்த மறைவான திருப்பத்தில் எதிரே வந்த டிரக்கைக் கவனிக்க முடியாமல் போனது. அதைக் கவனித்தபோது அடித்த திடீர் பிரேக்கும், மழைத் தண்ணீரால் மூழ்கிக் கிடந்த சாலையில் டக்கென்று பிரேக் பிடிக்காமல் கார் வழுக்கிக் கொண்டு போனது.ஆக, டிரக் மீது ஓபல் கார் பயங்கரமாக மோதி மோசமான விபத்து அரங்கேறி இருந்தது. கிட்டத்தட்ட மிகவும் நீண்ட தொலைவு வரை அரிகோவின் கார் மோதிய நிலையில் கட்டுப்பாடு இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.கதவு திறந்த நிலையில் பாதி உடம்பு உள்ளேயும், பாதி வெளியேயுமாக அரிகோ கிடந்தார். உள்ளே கால்கள் முறுக்கிய நிலையில் காணப்பட்டன. எஃகு கம்பி ஒன்று ஈட்டியை போல அரிகோவின் மார்பைத் துளைத்திருந்தது. தலையிலும், மார்பிலும் மேலும் காயங்கள். வாய் பிளந்து கிடக்க, தனது கடைசி மூச்சை விட்டிருந்தார் அரிகோ.'அய்யோ... அரிகோ செத்துப் போயிட்டாராம்...'' என்று தகவல் கேள்விப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுது அரற்றினர்.மேயர் அன்று பொது விடுமுறை அறிவித்தார்.ஆக, அரிகோவின் தீர்க்க தரிசனம் உண்மையானது. அவரது கனவில் வந்த கறுப்பு சிலுவை அவருக்கு அத்தகைய அற்புத முன்னுணர்வு சக்தியை அளித்தது என்பது இப்போது நிரூபணமானது. போகட்டும். அரிகோவிற்குப் பிறகும் சில ஆச்சரியங்களை, காரியங்களை ஜெர்மன் டாக்டர் ப்ரிட்ஸின் ஆவி தொடர்ந்து செய்ய முனைந்தது -தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !