குடை வள்ளல்!
தென்காசி, ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று தூறலாக இருந்ததால், குடை பிடித்தபடி, திணறலுடன் பள்ளிக்கு நடந்து கொண்டிருந்தேன். காற்று பலமாக வீசிய போது, குடை வெளிப்புறமாக விரிந்து, கம்பிகள் பிரிந்து, தனித்தனியாக சிதறின. அவற்றை அள்ளி பொட்டலமாக கட்டி, பரிதாபமாக வகுப்பறைக்குள் நுழைந்தேன். குறும்புக்கார மாணவர்கள் ஏளனமாக சிரித்து, ஆளுக்கொரு கம்பியை உருவி, திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., - வீரப்பா போல, கம்பிச் சண்டை போட்டனர். வகுப்பறையில் ஒரே அமளியாக இருந்தது.அப்போது, திடீரென வந்த தமிழாசிரியர் உ.குமாரசாமி முதலியாரை கண்டு இருக்கைக்கு தாவி ஓடினர் மாணவர்கள். அது குறித்து விசாரித்து அறிந்தவர், 'இன்று நடத்தப் போகும் பாடத்தின் தலைப்பு வேள்பாரி. அன்று, கேட்டோருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த பாரி, ஒரு கொடை வள்ளல்... இன்று குடைக் கம்பிகளை அள்ளிக் கொடுத்து, வகுப்பறையை கலகலக்க வைத்த இவன் குடை வள்ளல்...' என, என்னைப் பார்த்தார்.வகுப்பறை சிரிப்பால் அதிர்ந்தது. அந்த நிகழ்வை பாடத்துடன் இணைத்து, சுவை பட நடத்தியது மனதை கவர்ந்தது. பள்ளியில் பல நாட்கள், குடை வள்ளலாக வலம் வந்தேன்!இப்போது என் வயது, 70; இந்திய அணுசக்தி துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். மழையில் குடை எடுத்து செல்லும் போதெல்லாம், அந்த சம்பவம் நினைவுக்கு வந்து புத்துணர்ச்சி தருகிறது.- ஏ.வி.ராமநாதன், சென்னை.தொடர்புக்கு: 94456 83815