உள்ளூர் செய்திகள்

அந்த மரத்தடியில்!

அந்த மரத்தடியில் இளைஞர்கள் கூட்டமாக கூடி இருந்தனர். வழக்கம்போல் அரட்டை அடிக்க கூடிய கூட்டம்தான். திடீரென்று, அவர்களுடைய பேச்சு யாருடைய தந்தை பெரிய கருமி என்பதில் திரும்பியது. ஒரு இளைஞன், ''என் தந்தையைப் போன்ற கருமி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சிக்கனமாக இருக்கக் கூடிய எந்த பெண்ணை காதலித்தாலும், எனக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். என் காதலியை அவருக்கு அறிமுகம் செய்தேன். 'இவளை எப்படிச் சிக்கனமானவள்னு சொல்றே?' என்று கேட்டார்.'அப்பா! நான் காதல் கடிதம் எழுதி இவளிடம் கொடுத்தேன். உடனே, இவள் என் கன்னத்தில் அறைந்து இதை நேரா சொன்னா என்ன? எதற்காக பேப்பர், இங்க் எல்லாம் வீணாக்குகிறீர்கள் என்று கடிந்து கொண்டாள்' என்றேன். இதைக் கேட்டவுடன் என் தந்தை திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், 'திருமண அழைப்பிதழை திருமணமானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்' என்று கட்டுப்பாடு விதித்தார்.'நான் ஏன் என்று கேட்டதற்கு திருமணம் ஆகாதவர்களுக்குத் தந்தால் மீண்டும் அவர்கள் திருமணத்திற்குப் பரிசளிக்க வேண்டி இருக்கும்' என்று பதில் சொன்னார். ஆகவே, என் தந்தை தான் பெரிய கருமி,'' என்று முடித்தான்.மற்றோர் இளைஞன், ''என் தந்தையைப் பற்றித் தெரிந்த பின், யார் பெரிய கருமி என்ற முடிவுக்கு வரலாம்,'' என்றான்.''உன் தந்தையின் கருமித்தனத்தைப் பற்றிச் சொல்!'' என்றனர் மற்ற இளைஞர்கள்.''நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவைப் பார்த்து, 'அப்பா கருமிங்கறாங்களே அது யாருப்பா?' என்றேன். 'காசு தராதவன் கருமி!' என்றார் என் தந்தை. நான் உடனே, 'காசுன்னா என்னப்பா? அது எப்படி இருக்கும்?' என்று கேட்டேன். பெரியவனான பிறகு தான் காசுன்னா என்னதுன்னு தெரிய ஆரம்பிச்சது எனக்கு,'' என்றான்.அங்கிருந்தவர்களால் யார் பெரிய கருமி என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. கூட்டத்திலிருந்த ஒருவன், ''நீங்கள் இருவரும் உங்கள் தந்தையாரின் கருமித்தனத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள், நாங்கள் முடிவுக்கு வருகிறோம்!'' என்றான்.முதலாமவன் கூற ஆரம்பித்தான்.''என் தந்தையைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து ஊர்க் கருமி ஒருவர் வந்தார். என் தந்தையை பார்த்து, 'நீர் பெரிய கருமியா? என்று அறியவே இங்கு வந்துள்ளேன்' என்றார். இருவரும் கோவிலுக்குச் சென்றனர். ''கற்பூரத் தட்டுடன் வந்தார் ஐயர். தட்டில் யாராக இருந்தாலும் காசு போட வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து வந்த கருமி, செல்லாத ஒரு தம்பிடி நாணயத்தை தட்டில் போட்டார். என் தந்தையைப் பார்த்து, 'இதைவிடக் குறைந்த நாணயம் கிடையாது. நீங்கள் தட்டில் ஏதேனும் காசு போட்டாக வேண்டும். என்னிடம் தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை' என்றார்.''என் தந்தையார் அருகே ஐயர் வந்ததும், 'இவர் எனக்கும் சேர்த்துத்தான் தட்டில் காசு போட்டிருக்கிறார்' என்றார். உடனே, அந்தக் கருமி, என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கி விட்டுச் சென்றார்,'' என்று சொல்லி முடித்தான்.அடுத்த இளைஞன், ''என் தந்தையின் கருமித்தனங்களைச் சொல்ல வேண்டும் என்றால், பல நாட்களாகும்; ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன். ''ஒருநாள் என் தந்தை என்னை அழைத்து, 'மகனே நம் வீட்டில் மரம் வெட்ட வேண்டும். எதிர் வீட்டிற்குச் சென்று கோடாரி வாங்கி வா' என்றார்.''நானும் சென்று கேட்டேன். அவர்கள் இல்லை என்றனர். தந்தையிடம் வந்து கூறினேன். அவர் என்னைப் பக்கத்து வீட்டிற்கு அனுப்பினார். அங்கும் தரவில்லை. அந்த ஊரில் உள்ள எல்லா வீட்டிற்கும் என்னை அனுப்பினார். ''யாருமே தரவில்லை. வேறு வழியில்லாத என் தந்தை, கோபத்துடன், 'ஊரில் உள்ள அனைவரும் கஞ்சன்களாகி விட்டனர்; வேறு வழியில்லை; பரண் மேலே ஏறி நம்ம கோடாரியை எடு' என்றார்.''இன்னொரு சமயம், என் தந்தை நகரத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்த வாடகைக் காரை நிறுத்தி, 'இங்கிருந்து நான் பேருந்து நிலையம் செல்ல எவ்வளவு கட்டணம்?' என்று கேட்டார். 'பதினைந்து ரூபாய் ஆகும்' என்று பதில் வந்தது. 'இந்த பெட்டிக்கு?' என்று கேட்டார் என் தந்தை.'அதற்குக் கட்டணம் ஏதும் இல்லை' என்றார் ஓட்டுனர். 'அப்படியானால் இந்தப் பெட்டியைக் கட்டணம் இன்றிப் பேருந்து நிலையம் எடுத்துச் செல். நான் நடந்தே வருகிறேன்' என்றார் என் தந்தை. ஓட்டுனர் என் தந்தையைத் திட்டி விட்டு சென்றார். இப்படி எவ்வளவோ சொல்லலாம்'' என்று முடித்தான், அவன்.எல்லாரும் யாரைப் பெரிய கருமி என்று சொல்லி இருப்பர் என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !